சென்னை: “விதிமீறல்களை சரிசெய்து நீதி வழங்குவதில் நமது நீதித் துறை வலுவானது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நீங்கள் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று ராகுல் காந்திக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த நேரத்தில் நான் உங்களுடன் துணைநிற்கிறேன். நீங்கள் ஏற்கெனவே இதுபோன்ற நியாயமற்ற தருணங்களையும், சோதனையா நேரங்களையும் கடந்து வந்திருப்பீர்கள். விதிமீறல்களை சரிசெய்து நீதி வழங்குவதில் நமது நீதித் துறை வலுவானது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நீங்கள் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சத்யமேவ ஜெயதே” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Rahulji, I stand by you during these times! You have seen more testing times and unfair moments. Our Judicial system is robust enough to correct aberrations in dispensation of Justice. We are sure, you will get your justice on your appeal of the Surat Court’s decision! Satyameva…
— Kamal Haasan (@ikamalhaasan) March 23, 2023
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 பிணையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. அதற்குள் அவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.