ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெறும் டெல்லியில், `மோடி ஹட்டாவோ தேஷ் பச்சாவோ’ (மோடியை அகற்றுங்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள்) என்று எழுதப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்த விவகாரத்தில் நேற்று அவசர அவசரமாக 138-க்கும் மேற்பட்ட எப்.ஐ.ஆர்-கள் பதிவுசெய்யப்பட்டன. அதோடு, போஸ்டர்களை பிரின்ட் செய்த பிரஸ் உரிமையாளர் உட்பட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், `ஆங்கிலேயர்கள்கூட இதற்காக கைதுசெய்ததில்லை, மோடி அனைவரையுமே சிறையிலடைக்க விரும்புகிறார்’ என்று சாடியிருக்கிறார்.
ஜந்தர் மந்தரில் இன்று நடைபெற்ற பேரணியில் பேசிய கெஜ்ரிவால், “100 ஆண்டுகளுக்கு முன்பு, போஸ்டர் ஒட்டியதற்காக ஆங்கிலேயர்கள்கூட யாரையும் கைதுசெய்ததில்லை. ஆனால் யாருக்குத் தெரியும், இப்படி ஒரு பிரதமர் வருவார், போஸ்டர் ஒட்டியதற்காக ஒரே இரவில் 138 எப்.ஐ.ஆர்களைப் பதிவுசெய்வார் என்று. என்ன நடக்கிறது… கடந்த 24 மணி நேரத்தில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இதன் பின்னணியில் பிரதமர் இருக்கிறார். அவரின் உடல்நிலை நன்றாகத்தான் இருக்கிறதா…
`மோடி ஹட்டாவோ தேஷ் பச்சாவோ’ போஸ்டரில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அனைவரையும் சிறையில் அடைக்கும் அளவுக்கு பிரதமர் பாதுகாப்பற்றவராக இருப்பது ஏன்… அவரை நன்றாகத் தூங்கச் சொல்லுங்கள். ஏனெனில் அவர் மூன்று மணிநேரம் மட்டுமே தூங்குகிறார், அதுதான் பிரச்னை. அவர் சரியான தூக்கமின்மையால் அவதிப்படுகிறார். முடியாவிட்டால், நல்ல மருத்துவரை அவர் பார்க்க வேண்டும்.
எல்லா நேரங்களிலும் அவர் எரிச்சலாகவே இருக்கிறார். அனைவரையும் கைதுசெய்ய நினைக்கிறார். மோடி ஆரோக்கியமாக இருக்க கடவுளை நான் வேண்டிக்கொள்கிறேன். பா.ஜ.க-வினர் எனக்கெதிராகவும் போஸ்டர்கள் ஒட்டியிருக்கின்றனர். அதோடு, எனக்கெதிராக போஸ்டர் ஓட்டுபவர்களைக் கைதுசெய்ய வேண்டாம் டெல்லி போலீஸை கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்கள் தங்கள் தலைவர்களுக்கெதிராகவோ, ஆதரவாகவோ கருத்து தெரிவிக்க முழு உரிமை இருக்கிறது” என்று கூறினார்.