ஈபிஎஸ் – ஓபிஎஸ் மோதல் விவகாரம் இன்று சட்டமன்றத்திலும் எதிரொலித்தது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக பேசினர். ஈஸ்வரன், வேல்முருகன், ஜி.கே.மணி, செல்வப்பெருந்தகை, தளவாய் சுந்தரம், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.
அப்போது உறுப்பினர் பன்னீர்செல்வம் பேசலாம் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். எழுந்து பேசிய ஓபிஎஸ், அதிமுக சார்பில் மசோதாவை வரவேற்பதாகவும் விவாதமின்றி நிறைவேற்றி இருக்கலாம் என்றும் கூறினார்.
இதற்கு ஈபிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் பேசிய நிலையில் ஓபிஎஸ்-ஐ பேச எப்படி அனுமதிக்கலாம் என்றும் கட்சிக்கு ஒருவர் என்று சொல்லிவிட்டு ஏன் மற்றொருவரை பேச அனுமதித்தீர்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, முக்கியமான மசோதா என்பதால் முன்னாள் முதல்வர் என்ற முறையில் பேச வாய்ப்பு அளித்தோம். வேறு நோக்கம் கற்பிக்க வேண்டாம். அதிமுக எம்எல்ஏக்கள் இருக்கையில் அமர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதனால் ஓபிஎஸ் – ஈபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சட்டமன்றத்தில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
newstm.in