சென்னை,
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 21 ரன்களில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
இந்த நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது ,
இது அதிக ரன்கள் (269) என்று நான் நினைக்கவில்லை. .இரண்டாவது பாதியில் விக்கெட் கொஞ்சம் சவாலாக இருந்தது. நாங்கள் நன்றாக பேட் செய்ததாக நான் நினைக்கவில்லை. பார்ட்னர்ஷிப் முக்கியமானவை, அதைச் செய்யத் தவறிவிட்டோம்
ஒரு பேட்ஸ்மேன் போட்டியை எடுத்துச் சென்றிருக்க வேண்டும் .ஆனால் நாங்கள் அனைவரும் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்து கொண்டிருந்தோம்; அது நடக்கவில்லை.
இந்த போட்டியில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அதேபோல் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை விளையாடிய 9 ஒருநாள் போட்டிகளில் இருந்து எடுத்துக்கொள்ள நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன.ஆஸ்திரேலியா அணியினர் அபாரமாக செயல்பட்டார்கள். அவர்களின் ஸ்பின்னர்கள் இரண்டு பேரும் நிறைய அழுத்தம் கொடுத்தனர்.’என தெரிவித்துள்ளார்.