புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பாதிப்புகள் சீராக குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரம் எண்ணிக்கை வரை நெருங்கி உள்ளது மக்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் மூத்த அதிகாரிகளுடனான அவசர ஆலோசனை கூட்டம் ஒன்று நேற்று மாலை நடந்தது. இதில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மரபணு பரிசோதனையை அதிகரிக்கும்படி பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
ஆய்வக கண்காணிப்பு அவசியம் என வலியுறுத்தியதுடன், மரபணு பரிசோதனை மற்றும் கடுமையான சுவாச பாதிப்புகளுக்கு ஆளான அனைவருக்கும் பரிசோதனை செய்யும்படியும் வலியுறுத்தி உள்ளார்.
இதேபோன்று மருத்துவமனைகளில் மாதிரி சிகிச்சை முறைகளை நடத்திடும்படியும், கண்காணிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
ஒவ்வொருவரும் சுவாச சுகாதார பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்றும் கொரோனாவுக்கான முறையான அணுகுமுறையை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய தேவை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சூழலில், டெல்லியில் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறும்போது, இந்தியாவில் தற்போது உலக அளவில் ஒப்பிடும்போது, 1% கொரோனா பாதிப்புகளே பதிவாகி வருகின்றன.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தற்போது 7,600 ஆக உள்ளது. தினசரி சராசரியாக 966 பாதிப்புகள் பதிவாகின்றன. பிப்ரவரி மாதத்தின் 2-வது வாரத்தில் தினசரி 108 பாதிப்புகள் சராசரியாக பதிவாகின.
இந்த எண்ணிக்கை தற்போது 966 ஆக அதிகரித்து உள்ளது. நாட்டில் 8 மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
இதன்படி, மராட்டியம், குஜராத், கேரளா, கர்நாடகா, தமிழகம், டெல்லி, இமாசல பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதனை தொடர்ந்து, கடந்த 16-ந்தேதி இந்த மாநிலங்களுக்கு தனிப்பட்ட முறையில் நான் கடிதம் எழுதி, அவர்கள் என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தேன்.
இந்தியாவில் தற்போது பரவி காணப்படும் வைரசானது, ஒமைக்ரானின் வகையை சேர்ந்தவை ஆகும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.