ரஷ்ய அதிபர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், அவரை கைது செய்தால் அது ரஷ்யாவிற்கு எதிரான போர் பிரகடனமாக கருதப்படும் என முன்னாள் ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் போர் தற்போது அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒராண்டு ஆகியும் நிறைவடையாத போர் இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஏகாதிபத்திய அரசியலால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான்.
இந்தநிலையில் உக்ரைன் குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக தொடரப்பட்ட போர்க்குற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) கடந்த 17ம் தேதி கைது வாரண்ட் பிறப்பித்தது. 2002 இல் நிறுவப்பட்ட ஐசிசி, உலகின் மிக மோசமான குற்றங்களுக்கான நீதிமன்றமாக உள்ளது.
உக்ரைனின் அறிக்கையின் படி பிப்ரவரி 24, 2022 படையெடுப்பிலிருந்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரேனிய குழந்தைகள் ரஷ்யாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். பலர் நிறுவனங்கள் மற்றும் வளர்ப்பு வீடுகளில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தடவியல் சான்றுகள், ஆய்வுகளின் அடிப்படையில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி வழக்கறிஞர் கரீம் கான் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை என்று பாராட்டினார். அதேபோல் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இந்த வாரண்ட் “நியாயமானது” மற்றும் “மிகவும் வலுவான கருத்தை முன்வைக்கிறது” என்று கூறினார், அதே நேரத்தில் அமெரிக்கா ஐசிசியில் உறுப்பினராக இல்லை என்றும் குறிப்பிட்டார்.
“ரஷ்யா உக்ரைனில் போர்க்குற்றங்கள் மற்றும் அட்டூழியங்களைச் செய்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, அதற்குப் பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்தசூழலில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததைத் தொடர்ந்து விளாடிமிர் புடினை வெளிநாட்டில் கைது செய்ய முயற்சிப்பது, ரஷ்யாவால் “போர் பிரகடனமாக” பார்க்கப்படும் என்று ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் எச்சரித்துள்ளார். 2008 மற்றும் 2012 க்கு இடையில் அதிபராக பணியாற்றிய டிமிட்ரி மெட்வடேவ், தற்போது ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவராக இருக்கிறார்.
புடின் உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்பியதில் இருந்து, மீண்டும் மீண்டும் அணு ஆயுத அச்சுறுத்தல்களை விடுத்து மேற்கத்திய நாடுகளை பயமுறுத்தி வருகிறார் டிமிட்ரி. இது குறித்து அவர் கூறும்போது, ‘‘புடினை கைது செய்தால் ரஷ்ய ஆயுதங்கள், கைது செய்யப்பட்ட நாட்டை தாக்கும். ஒரு கற்பனை செய்வோம் – இது ஒருபோதும் நடக்காத விஷயம் என்றாலும், அது நடக்கும் என்று கற்பனை செய்வோம்.
பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்து சமைத்த நபர்; அமெரிக்காவில் கொடூரம்.!
“ஒரு அணுசக்தி அரசின் தற்போதைய தலைவர் (புடின்) ஜெர்மனியின் எல்லைக்கு வந்து கைது செய்யப்படுகிறார். இது என்ன? ரஷ்ய கூட்டமைப்புக்கு எதிரான போர்ப் பிரகடனம். இது நடந்தால், எங்கள் வழிகள் அனைத்தும், ராக்கெட்டுகள் மற்றும் பிற ஏவுகணைகள் அந்நாட்டின் அதிபர் அலுவலகத்தின் மேல் பறக்கும்” என்று கூறினார்.