சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு, கொளத்தூரைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஜனவரி மாதம் வந்து, ஆன்லைன் பிசினஸ் என்று கூறி தன்னிடம் 33 லட்சம் ரூபாயைச் சிலர் ஏமாற்றிவிட்டதாகப் புகாரளித்தார். இவரைத் தொடர்ந்து இன்னும் சிலர் ஆன்லைன் பிசினஸ் மோசடி தொடர்பாகப் புகாரளித்தனர். இதையடுத்து ஆன்லைன் பிசினஸ் மோசடி குறித்து விசாரிக்க சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, துணை கமினர் நாகஜோமி, கூடுதல் துணை கமிஷனர் சாஜிதா ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வினோத்குமார், எஸ்.ஐ-க்கள் லாமேக், பிரசாத் ஆகியோர்கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், புகாரளித்தவர்களிடம் விசாரித்தபோது, ஆன்லைன் பிசினஸ் என்ற பெயரில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் பேசியதாகவும், அவர் கொடுத்த தகவலின்படி டெல்லியைச் சேர்ந்த ஒருவரிடம் பேசியதாகவும் குறிப்பிட்டனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையிலான போலீஸார் மும்பைக்குச் சென்றனர். அந்த மாநில போலீஸாரின் உதவியோடு சில வீடுகளில் போலீஸார் ரெய்டு நடத்தினர். அப்போது கார்கர் ஏரியாவில் தங்கியிருந்த நைஜீரியாவைச் சேர்ந்த ஒகோரி காட்ஸ்வில் சைனாசா (32), உச்சே ஜான் இமேகா (47), காட்வின் இமானுவேல் (32), எபோசி உச்சென்னா ஸ்டான்லி (32) ஆகியோரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது, அவர்கள்தான் ஆன்லைன் பிசினஸ், கமிஷன் எனக் கூறி சென்னையைச் சேர்ந்தவர்களிடம் லட்சக்கணக்கில் ஏமாற்றியவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து நைஜீரியாவைச் சேர்ந்த 4 பேரைக் கைதுசெய்து, அவர்களிடமிருந்து செல்போன்கள், லேப்டாப்கள், வங்கிக் கணக்கு அட்டைகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைதானவர்களை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், பின்னர் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில் நைஜீரியாவைச் சேர்ந்த இந்தக் கும்பல், மும்பையில் தங்கியிருந்து சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களைத் தொடர்பு கொண்டு, ஆயுர்வேத ஆயில் சப்ளை செய்தால் கமிஷன் தருவதாக ஆசைவார்த்தைகளைக் கூறி… இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. இவர்களின் பின்னணியை போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து நம்மிடம் பேசிய சைபர் க்ரைம் போலீஸார், “நைஜீரியாவைச் சேர்ந்த இவர்கள், ஆன்லைன் மூலம் பிசினஸ் என்று கூறி இந்தியா முழுவதும் ஏமாற்றி வந்திருக்கிறார்கள். புற்றுநோய்க்கு மருந்து என்றும், முடி நன்றாக வளர ஆயுர்வேத ஆயில் எனவும் இஷ்டத்துக்குப் பொய் சொல்லியிருக்கிறார்கள்.
அதை நம்பவைக்க சில மாதிரிகளை அனுப்பியும் வைத்திருக்கிறார்கள். அதன்பிறகே எங்களிடம் புகாரளித்தவர்கள் நைஜீரிய கும்பல் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு லட்சக்கணக்கான ரூபாயை அனுப்பி ஏமாந்திருக்கிறார்கள். நைஜீரிய கும்பல் போன் மூலமாகவும் வாட்ஸ்அப் சாட்டிங் மூலமாகவும்தான் பேசியிருக்கிறது. அந்த ஆதாரங்களைக் கொண்டுதான் முதற்கட்டமாக நான்கு பேரைக் கைதுசெய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த மோசடிக்குப் பின்னால் பெரிய நெட்வொர்க் இருப்பது தெரியவந்திருக்கிறது” என்றனர்.