பொள்ளாச்சியில் இருந்து சேலத்திற்கு இளநீர் வரத்து அதிகரிப்பு: தினமும் 100 டன் வருகிறது

சேலம்: பொள்ளாச்சியில் இருந்து சேலத்திற்கு தினமும் 100 டன் இளநீர் வருவதாகவும், கோடைக்காலம் என்பதால் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பொள்ளாச்சி, திருப்பூர், கோபிச்செட்டிப்பாளையம், ஈரோடு, காங்கேயம், உடுமலைப்ேபட்டை, தாராபுரம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்பட பல பகுதிகளில் தென்னைமரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதிகளில் பறிக்கப்படும் தேங்காய் தமிழகம் மற்றும் வடமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இதை தவிர தேங்காய் எண்ணெய்க்காக இங்கிருந்து பல்லாயிரம் டன் கொப்பரை, எண்ெணய் அரவை ஆலைகளுக்கு செல்கிறது. கடந்தாண்டு பெய்த மழையால் தென்னை மரங்கள் உள்ள பகுதிகளில் அதிகளவில் காய்ப்பு பிடித்தது. இதன் காரணமாக தென்னை மரங்களில் இளநீர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் மட்டும் இளநீர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அங்கிருந்து சேலத்திற்கு நாள் ஒன்றுக்கு 100 டன் அளவுக்கு இளநீர் கொண்டு வரப்படுகிறது.

 இங்கு கொண்டு வரப்படும் இளநீர் சாலையோர வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அவர்கள் ஒரு இளநீர் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்கின்றனர். தற்போது கோடைக்காலம் என்பதால் இளநீர் அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப இளநீர் அதிகளவில் விற்பனைக்கு வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.