கடந்த 2017ஆம் ஆண்டில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் வங்கிக்கணக்கில் தனது வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்தும் அளவுக்கு பணம் இருந்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது.
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் கடன் மோசடி வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 3வது குற்றப்பத்திரிக்கையில் இந்த தகவலை சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
தனது ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக கடனாகப் பெற்ற சுமார் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாயைக் கொண்டு மல்லையா, ஐரோப்பாவில் சொத்துகள் வாங்கியதாகவும் ஸ்விட்சர்லாந்தில் தனது குழந்தைகள் பெயரில் இயங்கும் அறக்கட்டளைக்கு பணத்தை பரிமாற்றம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மல்லையாவுக்கு வரைமுறை இல்லாமல் விதிகளை மீறி கடன் கொடுத்ததாக ஐடிபிஐ வங்கியின் அப்போதைய பொது மேலாளர் புத்ததேவ் தாஸ்குப்தா என்பவரின் பெயரையும் குற்றப்பத்திரிக்கையில் சிபிஐ இணைத்துள்ளது.