உடன்குடி பேரூராட்சியின் முன்னாள் சேர்மன் சாதி வெறியுடன் திட்டியதால், விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட தூய்மைப் பணியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவத்திற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சியில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவி திருமதி ஆயிஷா கல்லாஸி, ஜாதியைச் சொல்லி அவமானப்படுத்தியதாக, 30 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த திரு சுடலைமாடன் அவர்கள், தற்கொலை செய்துள்ளார்.
திறனற்ற திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, எளிய மக்கள் மீதான ஜாதிய வன்கொடுமை தலைவிரித்தாடுகிறது. குற்றவாளிகள் தங்கள் கட்சிக்காரர்கள் என்பதால் அவர்கள் மேல் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப் போக்கைக் கையாளுவதால், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
மீண்டும் இது போன்ற ஜாதியக் கொடுமைகள் நடக்காத வண்ணம், உடனடியாக குற்றவாளிகள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.
பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்: தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொள்ள தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு அல்லது சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று அண்ணாமலை அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.