காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பணியின்போது உடல்நல குறைவால் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு காக்கும் காவல் நண்பர்கள் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் முன்னிலையில் குடும்ப நல நிதி வழங்கினர். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் தலைமை காவலராக பணியாற்றிய பூபதி கடந்த ஆண்டு டிச.24ம் தேதி பணியின்போது உடல் நல குறைவால் உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி பர்வதவர்தினி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில், 1997ம் ஆண்டு காவல் துறை பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 2வது பேட்ஜ் காவலர்கள் காக்கும் காவல் நண்பர்கள் என வாட்ஸ் ஆப் குழுவாக இணைந்து தமிழ்நாடு முழுவதும் பணியின்போது உயிரிழக்கும் குடும்பத்தினருக்கு குடும்ப நலநிதி வழங்கி வருகின்றனர். அதன் அடிப்படையில், குழு நிர்வாகிகளான ராஜராஜன் மற்றும் கணபதி ஆகியோர் ஒருங்கிணைப்பில் உயிரிழந்த பூபதிக்கு நிதி திரட்டப்பட்டது. இந்த நிதி ரூ.13 லட்சத்து 14 ஆயிரத்து 500, பூபதியின் மனைவி பர்வதவர்தினியிடம் நேற்று வழங்கப்பட்டது.