புதுச்சேரி: “ஆட்சியாளர், அமைச்சரவையின் அதிகாரத்தை துணைநிலை ஆளுநர் கபளீகரம் செய்து வருகிறார்” என்று புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் சிவா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று முதல்வர் துறையின் மானிய கோரிக்கைகள் மீது எதிர்கட்சித் தலைவர் சிவா பேசியதாவது: ”புதுச்சேரி மாநிலத்தில் இன்னும் எவ்வளவு காலத்துக்கு பொறுப்பு ஆளுநரை வைத்துக்கொண்டு நிர்வாகம் செய்வது. இதுவே மாநில வளர்ச்சிக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. அவரையேக் கூட முழு நேர ஆளுநராக நியமிக்கட்டும். இந்திய அரசியல் சட்டம் ஆட்சியாளர்களுக்கும், அமைச்சரவைக்கும் என்னென்ன அதிகாரங்களும், பொறுப்புகளும் உள்ளது என்பதை வரையறுத்துள்ளது. ஆனால் ஆட்சியாளர் அமைச்சரவையின் அதிகாரத்தையும் கபளீகரம் செய்து வருகிறார்.
இதைத்தான் பொறுக்க முடியாமல் முதல்வர் சட்டப்பேரவையில் புலம்புகிறார். தன்னுடைய அதிகாரம் பறிபோகிறது என்று தெரிந்தும் அரசியல் காரணங்களுக்காக அதனை வெளியில் சொல்ல முடியாமலும், நிர்வாகத்தை முறையாக செய்ய முடியாமலும் தவிப்பதை பார்க்கிறோம். ஆளுநராக நியமிக்கப்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும். தலைமைச் செயலரும், மத்திய அரசால் அனுப்பப்படுகின்ற ஐஏஎஸ் செயலாளர்களும் ஒரு குழுவாக ஒன்றிணைந்து மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்.
ஆண்டு பட்ஜெட் நிதி முழுமையாக செலவு செய்யப்படாமல் இருப்பதும், குறிப்பிட்ட அளவு நிதியை திருப்பி அனுப்புவதும் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படாமல் அறை குறையாக நிற்பதும் இதற்கு உதாரணம். கோப்புகளை திருப்பாமல் அதிகாரிகளை வரவழைத்து நேரடியாக விளக்கம் கேட்டு உடனடியாக நிதி ஒதுக்கீட்டுக்கு அனுமதி அளிப்பதில் அதிகாரிகளுக்கு என்ன பிரச்சனை. நிதிச் செயலர் தன்னுடைய அதிகாரத்தை காட்டுவதற்காகவே மாநில வளரச்சியை முடக்கிப் போடுகிறார். மாணவர்களுக்கு வருவாய்ச் சான்றிதழ் அளிப்பதை மாற்றி அமைத்து தமிழகத்தில் வழங்கப்படுவது போல் நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலை புதுச்சேரி அரசு மறந்துவிட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி புதுச்சேரி அரசு நடத்த வேண்டும். தூய்மைப் பணியில் முழுமையாக இன்று ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. அதில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் நலன், அந்த ஒப்பந்தத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள புதுச்சேரி ஒப்பந்த தொழிலாளர் சட்டப்படி பாதுகாத்திட உள்ளாட்சித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரப் பதிவில் நடைபெறுகின்ற முறைகேடுகள் களையப்பட வேண்டும். நில அளவைத் துறை மற்றும் புதுச்சேரி நகரக் குழுமம் மிகப் பெரி செல்வந்தர்கள், ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது.
ஏழை, எளிய மக்கள் தான் வாங்கிய மனைக்கு அப்ரூவல் வாங்குவதற்கு திண்டாட வேண்டி உள்ளது. போலி பத்திரப் பதிகள் அதிகரித்துள்ளன. இதனை வரன்முறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் வில்லங்க சான்று ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தவறு செய்வதற்காகவே அதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த மறுக்கின்றனர். பத்திரப் பதிவுத்துறை கணினி மயமாக்கப்பட வேண்டும். துறைமுக முகத்துவாரத்தில் ரூ.25 கோடி செலவு செய்ய வேண்டிய இடத்தில் ரூ.7 கோடி அளவுக்கு மட்டுமே வேலை நடந்திருப்பதாக தெரிகிறது.
இது குறித்து அரசு விசாரணை வைக்க வேண்டும். ஜிஎஸ்டி எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு 2 சதவீதமும், துறைமுகத்தில் இறக்குமதி செய்யக்கூடிய பொருட்கள் ஒரு டன்னுக்கு ரூ.1 கட்டணம் வசூலிப்பது அரசுக்கு அவமானம். தமிழகத்தில் பொருட்களுக்கு தகுந்தார்போல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுபோல் புதுச்சேரியிலும் நிர்ணயம் செய்ய வேண்டும். அதன் மூலம் புதுச்சேரிக்கு ரூ. 200 கோடி வருமானம் கிடைக்கும். முதல்வரின் காமராஜர் ஆட்சியில் முறையின்றி ரெஸ்டோ பார்கள் திறக்கப்படுகிறது. 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கலாச்சார சீரழிவு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதனையெல்லாம் முறைப்படுத்த வேண்டும்” என்று அவர் பேசினார்.