பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய எதுவாக ராகுல் காந்திக்கு உடனடியாக பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாஜக சட்டமன்ற உறுப்பினரான புர்னேஷ் மோடி குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இதனையடுத்து ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் எம்பி.ராகுல் காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது உங்களுக்கு திமுக எப்போதும் ஆதரவாக இருக்கும் என பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அருங்காட்சியகத்தை வரும் ஜூன் 3ம் தேதி ராகுல் காந்தி அல்லது சோனியா காந்தி திறந்து வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.