திருச்சி: மதிமுகவினருடன் தகராறு வழக்கில் திருச்சி கோர்ட்டில் நேற்று சீமான் ஆஜரானார். மதிமுக பொது செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கடந்த 2018ம் ஆண்டு சென்னையில் இருந்து விமானத்தில் திருச்சி வந்தனர். அப்போது இவர்களை வரவேற்பதில் ஏற்பட்ட தகராறில் இரு கட்சி தொண்டர்களும் மோதிக்கொண்டனர். இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ்காரரின் டூவீலர் அடித்து நொறுக்கப்பட்டது.
இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் சீமான் மற்றும் அவரது கட்சியினர் 14 பேர் மீதும், மதிமுகவினர் 5 பேர் மீதும் பொது சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு திருச்சி முதலாவது மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி பாபு, இந்த வழக்கு சம்பந்தமாக ஏதாவது கூற விரும்புகிறீர்களா என்று கேட்டார். அதற்கு சீமான், ‘என் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி உள்ளனர். சம்பவம் நடந்ததாக கூறப்படும் நேரத்தில் நான் விமான நிலையத்தின் உள்புறத்தில் இருந்தேன்’ என்றார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 19ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.