“ஜெகன் கொலையில் சம்மந்தப்பட்டவர் புளுகான் கொட்டாய் அதிமுக கிளைச்செயலாளர் சங்கர் என்பது தெரிய வந்துள்ளது. இதுவே இதன் பின்னணியில் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்ப்பு உள்ளது என்ற உள் அர்த்ததுடன் தமிழக சட்டப்பேரவையில், முதல்வர் ஸ்டாலின் பேசியதற்கு, அதிமுக உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பொய்யான, தவறான தகவலை தெரிவித்து இருப்பதாக அதிமுக தரப்பில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
ஜெகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சங்கர் அதிமுக.,வில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. அவர் கட்சியின் உறுப்பினர் மட்டுமே என்று, கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரின் அறிக்கையில், “கடந்த 2021-ல் நடந்த அதிமுக, அமைப்புத் தேர்தலில், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம், பெரியமுத்துார் ஊராட்சி, புளுகான் கொட்டாய் கிளை நிர்வாகிகளாக, அவைத்தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் கண்ணாயிரம், இணைச் செயலாளர் காவேரியம்மாள், துணைச் செயலாளர்கள் மாதேஸ்வரி, கணேசன், பொருளாளர் சரவணன், மேலமைப்புப் பிரதிநிகள் சிவரஞ்சினி, மணி ஆகியோர் மட்டுமே பொறுப்பில் நியமிக்கப்பட்டனர்.
இதுவரை இந்த பொறுப்புகளுக்கு வேறு யாரும் நியமிக்கப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நடந்து வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் ஸ்டாலின், புளுக்கான் கொட்டாய் கிளைச் செயலாளர் சங்கர் என தவறாகக் குறிப்பிட்டுள்ளார்.
சங்கர் ஒரு உறுப்பினர் மட்டுமே. அவர் அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.