மும்பை: இந்தியாவின் ஆராய்ச்சி கட்டுரை வெளியீடுகள் 54% அதிகரித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் இந்தியா 4-ம் இடத்தைப் பிடித்துள்ளது.
உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் ஆராய்ச்சி மையங்களில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. ஆனால் ஆராய்ச்சி தொடர்பான அனைத்திலும் இந்த வளர்ச்சி இல்லை என்பது கவலை அளிப்பதாக, ஆராய்ச்சி கட்டுரைகளை கண்காணிக்கும் க்யூஎஸ் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் கடந்த 2017 முதல் 2022 வரையிலான காலத்தில் ஆராய்ச்சி கட்டுரை வெளியீடுகள் சராசரியாக 22% அதிகரித்துள்ளதாக தரவு நுண்ணறிவு நிறுவனமான சைவால் (SciVal) தெரிவித்துள்ளது.
கல்வித் துறையில்..: இதே காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி சர்வதேச சராசரியைப்போல 2 மடங்குக்கும் அதிகமாக (54%) அதிகரித்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கல்வித் துறையில் முன்னேறிய மேற்கத்திய நாடுகளை விடவும் இந்தியா சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது. ஆராய்ச்சி கட்டுரை வெளியீட்டில் சீனா 45 லட்சத்துடன் முதல் இடத்தில் உள்ளது.
இதுபோல அமெரிக்கா (44 லட்சம்) 2-ம் இடத்திலும், பிரிட்டன் (14 லட்சம்) 3-ம் இடத்திலும், இந்தியா (13 லட்சம்) 4-ம் இடத்திலும் உள்ளன. இதே வேகத்தில் சென்றால் பல்துறை ஆராய்ச்சி வெளியீடுகளில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா விரைவில் 3-ம் இடத்தைப் பிடித்துவிடும்.
இதுபோல 89 லட்சம் மேற்கோள்களை இந்தியா உருவாக்கி உள்ளது. அதேநேரம் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிகளின் தாக்கத்தைப் பொருத்தவரை, நிதி ஒதுக்குவது மற்றும் ஆதாரங்களை சமர்ப்பிப்பதில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் 52.6% பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்புடையவை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.