மம்தா பான்ர்ஜி – நவீன் பட் நாயக் சந்திப்பு: மூன்றாவது அணி வேலைகள் தொடங்கிவிட்டதா?

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில் எந்த கட்சி எந்த கூட்டணியில் இடம்பெறும், பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் வலுவான அணியை அமைக்குமா, மூன்றாவது அணி உருவாகுமா என்ற விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

2014, 2019 ஆகிய இரு தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வருகிறது பாஜக. இந்த காலகட்டத்தில் பாஜக பல்வேறு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளது, சில மாநிலங்களில் ஆளும் கட்சிகளோடு கூட்டணியில் இருக்கிறது. இந்த ஒன்பது ஆண்டுகளில் கட்சியையும் பலப்படுத்தியுள்ளது.

பாஜகவை இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்றால் எதிர்கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் திரள வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் உள்ளிட்டோர் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் மம்தா பானர்ஜி ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மூன்று நாள் பயணமாக ஒடிசா சென்ற மம்தா நேற்று நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசினார்.

அதன்பின் இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய நவீன் பட்நாயக், “இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. அதிகாரபூர்வமற்ற சந்திப்பு. நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றி எதுவும் பேசவில்லை. கூட்டாட்சி முறையை மேலும் வலுப்படுத்துவது பற்றி விவாதித்தோம்” என்று கூறினார்.

மம்தா பானர்ஜி பேசும் போது, “நவீன் பட்நாயக் மிக உயர்ந்த தலைவர். அவருடன் எப்போதும் நல்லுறவு உள்ளது. கூட்டாட்சி முறை பற்றிய அவரது கருத்தை ஆதரிக்கிறேன். மூன்றாவது அணி பற்றி எதுவும் பேசவில்லை. மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றித்தான் பேசினோம். அவர் அளித்த வரவேற்பு, விருந்தோம்பல் மகிழ்ச்சி அளிக்கிறது ” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.