சென்னை: ரிசர்வ் வங்கி மற்றும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இந்திய பொருளாதாரம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல் விவாதம் சென்னை அடையாறில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வை ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான என்.கோபாலசாமி தொடங்கி வைத்தார்.
கலந்துரையாடல் குழுவில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் பேராசிரியர் டி.ஜெயராமன், சென்னை பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு புவியியல் பேராசிரியர் ஆர்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் கே.எஸ்.கவிகுமார், உலக வள நிறுவனத்தின் காலநிலை மாற்ற பிரிவின் இயக்குநர் ஏ.அறிவுடைநம்பி ஆகியோர் உறுப்பினர்களாக கலந்துகொண்டு கல்லூரி மாணவர்களுடன் விவாதித்தனர்.
இந்நிகழ்வில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி என்.கோபாலசாமி பேசியதாவது: காலநிலை மாற்றம் குறித்து உலகளவில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வளர்ச்சிஅடையாத சிறிய நாடுகள் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் என்றாலும், அனைத்து நாடுகளும் தனித்தனியாக காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அந்த வகையில், இந்தியாபூஜ்ஜியம் கார்பன் நிலையை அடைய2070-ம்் ஆண்டை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இன்றைய சூழலில் இது மிகவும் கடினமாகத் தோன்றலாம். சில ஆராய்ச்சி முடிவுகளின்படி 2100-ம் ஆண்டுவரை 2.5 முதல் 3.2 டிகிரி வரை வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளன. இருந்தாலும் இந்தியா இவற்றை எதிர்கொள்ள தயாராக உள்ளது. இதற்காக சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சினைகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ரிசர்வ் வங்கி பிரிவு தலைமை பேராசிரியர் வெங்கடாச்சலம், முன்னாள் ரிசர்வ் வங்கி செயல் இயக்குநர் உமா சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் நூலகத்தில் பொருளாதாரம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த புத்தக கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.