சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை அதிமுக சார்பில் ஆதரிப்பதாக ஓபிஎஸ் கூறியதற்கு, பழனிசாமி தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் சட்டப்பேரவையில் மோதல் ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் நேற்று ஆன்லைன் ரம்மி தடை தொடர்பான மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தாக்கல் செய்ததுடன், மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். இதை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வரவேற்றுப் பேசினர்.
அதிமுக சார்பில் தளவாய் சுந்தரத்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து பேசவாய்ப்பு கேட்டார். அவருக்கு பேரவைத் தலைவர் அனுமதியளித்தார்.
அப்போது பேசிய ஓபிஎஸ்,‘‘முதல்வர் கொண்டு வந்த ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை விவாதமின்றி, ஒருமனதாக நிறைவேற்றியிருக்கலாம். பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுள்ளன. எனினும், முதல்வர் கொண்டுவந்த தடை சட்ட மசோதாவை அதிமுகசார்பில் ஒருமனதாக வரவேற்கிறேன்’’ என்றார்.
இதற்கு பழனிசாமி தரப்பினர் எழுந்து ஆட்சேபம் தெரிவித்தனர். அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, ‘‘ஒரு கட்சிக்கு ஒருவரை மட்டுமே பேச அனுமதிக்கிறீர்கள். என் தலைமையில் அதிமுக செயல்படுகிறது. நான் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளேன். அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் பேசியுள்ளார். அதன் பின் ஏன் பேச அழைக்கிறீர்கள்? இது குழப்பத்தை ஏற்படுத்துவது போல உள்ளது’’ என்றார்.
அப்போது பழனிசாமி தரப்பு உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷமெழுப்பினர். அதேபோல, ஓபிஎஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன் எதிர்கோஷம் எழுப்பினார். தொடர்ந்து நடைபெற்ற விவாதம்:
பேரவைத் தலைவர் அப்பாவு: நான் ஓ.பன்னீர்செல்வத்தை, அதிமுக உறுப்பினர் என்று அழைக்கவில்லை. மாண்புமிகு உறுப்பினர் என்றுதான் பேச அழைத்தேன்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: பேரவையில் உறுப்பினர்கள் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் நியமிக்கப்படுகிறார். நீங்கள் பிரச்சினையை ஏற்படுத்துகிறீர்கள்.
பேரவைத் தலைவர்: வேறு நோக்கம் கற்பிக்காதீர்கள். முன்னாள் முதல்வர் என்ற முறையில் அவர் பேச அனுமதி கேட்டதால், அளித்தேன்.
பழனிசாமி: முக்கியமான மசோதா மீது கட்சிக்கு ஒருவர் பேசவேண்டும் என்று நீங்கள் அறிவித்துள்ளீர்கள. அதுதான் நடைமுறை. ஆனால், மரபுக்கு மாறாக ஒருவரை பேச அழைப்பது என்ன நியாயம்?
அப்போது ஓபிஎஸ் தரப்பு உறுப்பினர் வைத்திலிங்கம், பழனிசாமி தரப்பு உறுப்பினர் கே.பி.முனுசாமி ஆகியோர், தங்களது இருக்கையில் இருந்து எழுந்து வந்து, எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை அருகில் நின்று பேசினர்.
அப்போது பேசிய பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ‘‘இதில் அவைக்கோ, எனக்கோ, முதல்வருக்கோ எந்த நோக்கமும் இல்லை. முன்னாள் முதல்வர் கருத்து கூறவாய்ப்பு கேட்டதால், நான் அனுமதி கொடுத்துள்ளேன். மசோதாவில் பேச கட்சிக்கு ஒருவருக்கு அனுமதி என்று கூறவில்லை. தவறான நோக்கம் கற்பிக்க வேண்டாம்’’ என்றார். எனினும், அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
தொடர்ந்து பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, ‘‘இந்த அவைக்கு பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிதான் அதில் எந்த மாற்றமும் இல்லை. முன்னாள் முதல்வர், மூத்த உறுப்பினர் என்றுதான் கூறினேனே தவிர, உங்கள் விவகாரத்துக்குள் நான் வரவில்லை’’ என்றார்.
அப்போது, ஓபிஎஸ் தரப்பு உறுப்பினர் மனோஜ் பாண்டியன், பழனிசாமி தரப்பு உறுப்பினர் பிஆர்ஜி.அருண்குமார் இடையே வாக்குவாதம் முற்றியது. மனோஜ் பாண்டியனை ஓபிஎஸ் சமாதானப்படுத்தினார். அருண்குமாரை முனுசாமிசமாதானப்படுத்தினார். பின்னர்,பழனிசாமி தரப்பினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.