மதுரை: “தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணியில் எந்தவித குழப்பமில்லை. நான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது வழக்கமானதே” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (மார்ச்.23) டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பு பற்றி பல்வேறு ஊகங்கள் நிலவிவந்தன. அதிமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள அண்ணாமலை அமைச்சர் அமித் ஷாவிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இன்று காலை மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. நான் டெல்லி சென்று அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அமித் ஷாவுடனான எனது சந்திப்பு வழக்கமானதே.
இந்த சந்திப்பின்போது பாஜக வளர்ச்சி, கட்சிப் பணிகள் பற்றி பேசினேன். தமிழக அரசியல் நிலவரம் பற்றி பேசினேன். தமிழகத்தில் பாஜகவை வலிமையாக்குவது குறித்து பேசினேன். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து 20 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. ஒரு இடைத்தேர்தல் நடந்துள்ளது.
தமிழகத்தின் அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில் நான் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி பற்றியே அமைச்சர் அமித் ஷாவிடம் பேசினேன். நாங்கள் தமிழகத்தில் வேகமாக வளர வேண்டும் என்ற முனைப்பில் உள்ளோம். பாஜக மக்கள் செல்வாக்கைப் பெற விரும்புகிறது. ஆளுங்கட்சியாக வளர விரும்புகிறது. அது குறித்தே பேசினேன். மேலும் கூட்டணி விவகாரங்களில் பாஜக மத்தியக் குழு தான் எந்த ஒரு முடிவும் எடுக்கும். ஆகையால் நான் கூட்டணி விவகாரங்கள் பற்றி ஏதும் பேசவில்லை.
நான் ஏற்கெனவே சொன்னதுபோல் எல்லாக் கட்சியினரும் அவர்கள் கட்சியே வளர வேண்டும் என்றே விருப்பம் இருக்கும். கூட்டணியில் இருந்தாலும் அவ்வாறே கட்சிகள் நினைக்கும், செயல்படும். மேலும், ஒரு கூட்டணியில் சிராய்ப்புகள், உரசல்கள் வருவது சகஜமே. மற்றபடி எங்கள் கூட்டணி ஆக்கபூர்வமான கூட்டணி. எனக்கோ, பாஜகவுக்கோ எந்த ஒரு தனிப்பட்ட கட்சி, தலைவர் மீது கோபமில்லை” என்றார்.