சென்னை: பிரபல பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த20-ம் தேதி தொடங்கியது. பொதுபட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் உகாதி பண்டிகையை யொட்டி பேரவைக்கு 22-ம் தேதி விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், சட்டப்பேரவை நேற்று மீண்டும் கூடியது. பேரவை தொடங்கியதும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகளை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.
1980-84, 85-88வரை குளத்தூர் தொகுதி உறுப்பினராக இருந்த த.மாரிமுத்து, 1980-84வரை ஜெயங்கொண்டம் தொகுதிஉறுப்பினராக இருந்த ப.தங்கவேலு, 1989-91, 96-2001, 2001-06, 2006-2011 ஆகிய ஆண்டுகளில் தஞ்சாவூர் பேரவை தொகுதி உறுப்பினராகவும், 2006-11-ல் அமைச்சராகவும் இருந்த எஸ்.என்.எம்.உபயதுல்லா மற்றும் 1991-96-ல் மன்னார்குடி உறுப்பினராக இருந்த கு.சீனிவாசன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பிரபல பாடகி வாணிஜெயராம் மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை பேரவை தலைவர் மு.அப்பாவு வாசித்தார். முன்னாள் உறுப்பினர்கள், பாடகி வாணி ஜெயராம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.