ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத் திட்டத்தினாலும், மக்களின் தியாகத்தினாலும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் நிவாரணம் பெறும் தகுதியின் அடிப்படையில் இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு போதுமான நம்பகத்தன்மை சர்வதேச நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. இல்லாவிடின், யார் ஆட்சிக்கு வந்தாலும் இரண்டு வாரங்களுக்கு மேலாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்று வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கான கடன் வசதிகள் மற்றும் எதிர்கால பொருளாதார நடவடிக்கைகள் என்ற தலைப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மற்றும் அதன் நிபந்தனைகள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
கடன்கள் தொடர்பில் நம்பகத்தன்மை இல்லாவிடின் எரிபொருள், எரிவாயு, மருந்துகள் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான கடன் கடிதங்களை சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளாது. அப்படியானால் அந்த தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தனது பொறுப்பை செய்துள்ளதாகவும் ஏனையவை மக்களின் கைகளிலேயே இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இதற்கு முன்னர் 16 தடவைகள் உதவி கோரப்பட்ட போதிலும், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்ட நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த தவறியதன் காரணத்தினால் ஒரு சந்தர்ப்பத்தில் கூட நாட்டை மீள கட்டியெழுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த நிலமைகளை கருத்தில் கொண்டு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.