புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 1,249 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,927 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் 1,249 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 7,927 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 61 ஆயிரத்து 922 ஆக உள்ளது. கரோனா தொற்றால் கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர். இதன்படி, கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 818 ஆக உள்ளது.
இதுவரை நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், 220 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தினசரி தொற்று பாதிப்பு 1,000-ஐ கடந்து வருகிறது. நாட்டில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் 5 அடுக்குத் திட்டங்களைப் பின்பற்ற மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருந்தது. நாடு முழுவதும் கோவிட்-19 மற்றும் இன்ஃப்ளூயன்சா நோய் குறித்த சூழல்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.