சென்னை அமைந்தகரையில் ஆருத்ரா நிதி நிறுவனம் என்ற பெயரில் கோல்டு டிரேடிங் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் பல கிளைகள் அமைத்து 10 முதல் 30 சதவீதம் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்துள்ளனர். இதனை நம்பிய மக்கள் பலர் அந்நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கின்றனர். ஆனால், குறிப்பிட்ட தேதியில் முதிர்வு தொகையை அந்நிறுவனம் பொதுமக்களுக்கு திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளனர். இது குறித்து காவல்துறைக்கு புகார் சென்றதன் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய தொடங்கியது.
இதில் சுமார் 2,438 கோடி ரூபாய் அளவுக்கு பொதுமக்களிடம் ஆரூத்ரா நிறுவனம் வசூல் செய்தது விசாரணையில் தெரியவந்தது. தொடர் விசாரணையில் பல்வேறு நிதிமுறைகேடுகளைக் கண்டுபிடித்த பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை ஆரூத்ரா நிறுவனத்தின் இயக்குநர்கள் 14 பேர் மற்றும் அதே நிறுவனத்தின் பெயரில் செயல்பட்ட மேலும் 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான விசாரணையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் ஹரீஷ் என்பவர் தலைமறைவாக இருந்ததுடன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.
அவருக்கு பாஜக விளையாட்டு பிரிவின் மாநில செயலாளர் பொறுப்பும் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு தலைமறைவான அவரை காவல்துறையினர் வலைவீசி தேடினர். இந்நிலையில், அவரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தேடிக் கண்டுபிடித்து கைது செய்துள்ளது. ஹரீஸூடன் இணைந்து மாலதி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நிதிமோசடி புகாரில் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. குறிப்பாக தலைமறைவாக இருந்த ஹரீஷூக்கு அடைக்கலம் கொடுத்தது யார்? என்று விசாரணையில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.