ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கும் சில திமுக அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளது என்று மதுரை விமான நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தூத்துக்குடி செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு மதுரை விமான நிலையத்தில் பாஜக மதுரை மாநகர் மற்றும் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “நேற்றைய தினம் ராகுல் காந்திக்கு குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்து 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உள்ளது. 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்திக்கு பதவி பறிபோகும்.
ராகுல் காந்தி விவகாரம்!
உலகில் உள்ள மோசடி செய்வர்களின் பெயர்கள் மோடி என்ற பெயரில் உள்ளது என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். குஜராத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மோடி என்று துணை பெயர்கள் உள்ளன. அவர் ஒட்டுமொத்தமாக விமர்சனம் செய்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்து சென்ற பெண்கள் மீது பாலியல் தொல்லை நடந்ததாக குற்றம் சாட்டினார். ஆனால் காவல்துறை அதிகாரிகள் யார் என்று சொல்லுங்கள் நடவடிக்கை எடுப்போம் என கூறியதற்கு ராகுல் காந்தியால் விளக்கம் அளிக்க முடியவில்லை.
தமிழகத்தில் பாஜகவை பற்றி அவதூறு செய்கிறார்கள். வராத ரயில் பாதையில் நின்று போராட்டம் நடத்துகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் கை சின்னத்தில் கூட 5 விரல்கள் உள்ளன. ஆனால் அதன் மாநில தலைவர் பின்னால் பெரும் 3 பேர் தான் உள்ளனர்.
டெல்லி பயணம்
பாரதிய ஜனதா கட்சியில் தேசிய தலைவர் முதல் இந்தியாவின் கடைசி தொண்டர்கள் வரை கட்சியை வலுப்படுத்த வேண்டும். ஆட்சியில் அமர வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளனர்.
டெல்லி பயணம் வழக்கமான ஒன்று கர்நாடகா மற்றும் தமிழகத்தில் நடைபெற இருக்கும் தேர்தலுக்காக தலைவர்களை சந்திக்க சென்றேன். தமிழகத்தில் தேர்தல் களம் புதிது புதிதாக உள்ளது. தமிழகத்தில் தேர்தல் களத்தை பற்றியும், இடைத்தேர்தல் பற்றியும் தேசிய தலைவரை சந்தித்து பேசினோம்.
பாஜகவை பொறுத்தவரை எல்லோரும் வளர வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். யார் வரவேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.
எங்களைப் பொறுத்தவரை அதிமுக பாஜக கூட்டணியில் மாற்றம் இல்லை. அதிமுக கூட்டணியில் இருந்தாலும் 50 ஆண்டுகள் உள்ள கட்சி அவர்கள் தாங்கள் வளரவேண்டும் என்பது தான் அவர்கள் கருத்து. நாங்களும் அதை தான் விரும்புகிறோம்.
பால் கொள்முதல்
பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்து வந்தேன். மற்ற மாநிலங்களில் பால் விலையை விட தமிழகத்தில் பால் கொள்முதல் விலை குறைவு. அமைச்சர் நாசர் கனவு உலகத்தில் இருக்கிறார். தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொல்கிறார். தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி தராவிட்டால் பால் உற்பத்தியாளர் சங்கத்துடன் கைகோர்த்து கோட்டையை நோக்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
இதுவரை கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாததால் கூட்டணியில் தான் ஆட்சி நடந்து வந்தது. இதனால் மக்களுக்கு எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களும் சரிவர கிடைக்கவில்லை. 2023 சட்டமன்ற தேர்தலில் கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி 140 இடங்களில் வெற்றி பெறும் என நினைக்கிறேன். பெரும்பான்மை நிரூபிக்கப்படாததால் கூட்டணி ஆட்சி வந்தது. கர்நாடகாவில் ஒரே கட்சிக்கு வாக்களித்தால் மட்டுமே வளர்ச்சி திட்டங்கள் வரும் என மக்கள் தற்போது உணர்ந்துள்ளார்கள்.
ஆனலைன் சூதாட்ட தடை சட்டம்!
சூதாட்ட ரம்மி நிறுவனங்கள் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடர்ந்தால் திமுக அரசு என்ன செய்யும்? என்னை பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கும் சில திமுக அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளது என நினைக்கிறேன். ஊழல் பட்டியலை ஏப்ரல் 14ஆம் தேதி நிச்சயம் வெளியிடுவேன். அதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை.
கமலஹாசன் பேசுவது ஏற்கனவே புரியாது. இதில் ராகுல் காந்தியுடன் சந்தித்து பேசியது சுத்தமாக விளங்காது. அவர்களே காங்கிரஸ் கட்சியுடன் இணைகிறார்கள் என மக்கள் நீதி மையம் பக்கத்திலிருந்து தெரிவிக்கிறார்கள். அதன் பிறகு யாரோ ஹேக் செய்திருக்கிறார்கள் என்று கருத்து தெரிவிக்கிறார்கள். அதன் பின் சேர்வோம் என கருத்து தெரிவிக்கிறார்கள். அவர்கள் ஒரு நிலைப்பாட்டில் இல்லை” என்று பேசினார்.