பியாங்யோங்: கடலுக்கு அடியில் ரேடியோ ஆக்டிவ் சுனாமியை ஏற்படுத்தும் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக வட கொரியா தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் தென் பகுதியில் உள்ள ஹம்க்யோங் மாகாணத்தில் கடலுக்கு அடியில் ரகசிய ஆயுதத்தை செலுத்தினோம். இது 80 முதல் 150 மீட்டர் ஆழத்தில் 59 மணி நேரத்திற்கும் மேலாக பயணித்து அதன் கிழக்கு கடற்கரையில் வெடித்தது . இதன்மூலம் ரேடியோ ஆக்டிவ் சுனாமியை ஏற்படுத்தினோம் . இந்தச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு வட கொரிய அதிபர் கிம் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக வட கொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த சோதனையில் எந்தவிதமான ஆயுதத்தை வட கொரியா பயன்படுத்தியது என்பது தெரிவிக்கப்படவில்லை.
வட கொரியாவின் இந்த பரிசோதனை காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவுகிறது. மேலும், இந்தப் பரிசோதனையை தென் கொரியா கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து தென் கொரிய அதிபர் யுன் சுக் யோல் கூறும்போது, “இம்மாதிரியான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளுக்கான விலையை வட கொரியா கொடுக்க நேரிடும்” என்றார்.
ரேடியோ ஆக்டிவ் சுனாமி என்றால் என்ன? – கடலுக்கு அடியில் அணு ஆயுத ஏவுகணைகளை செலுத்தும்போது, அவை குறிப்பிட்ட தூரம் பயணத்து பின்னர் கடலில் வெடித்து சிதறும்போது ரேடியோ ஆக்டிப் அலைகள் ஏற்படும். இவையே ரேடியோ ஆக்டிவ் சுனாமி என்று அழைக்கப்படுகிறது.
அமெரிக்க – தென் கொரிய படைகள் கொரிய தீபகற்பத்தில் கடந்த சில நாட்களாக ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், இம்மாத இறுதியில் இரு நாடுகளும் மிகப் பெரிய ராணுவ பயிற்சிக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், வடகொரியா மீண்டும் ஆயுத சோதனையை நடத்தியுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வடகொரியா 10-க்கும் அதிகமான ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கரோனா பெருந்தொற்று காரணமாக வட கொரியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை சரி செய்வதில் கவனம் செலுத்தாமல் ஏவுகணை சோதனைகளை மேம்படுத்துவதிலேயே அந்நாடு கவனம் செலுத்துவதாக ஐ.நா. கடந்த ஆண்டு கண்டித்திருந்தது. இதற்காக வட கொரியா மீது பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வட கொரியா ஆயுத பரிசோதனையை தொடர்ந்து வருகிறது.