தமிழ்நாட்டில் பல மாவட்ட ஆட்சியர்களின் பெயரைக் கூறி தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தானம் (எ) சந்தான பாரதி. டாக்ஸி ஓட்டுநரான இவர், பட்டுச்சேலை வாங்குவதற்காக காஞ்சிபுரத்திற்கு சென்றுள்ளார். அப்போது அருகாமையல் இருந்த டீக்கடையில் பேப்பர் பார்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பேப்பரில் இருந்த ஒரு செய்தியில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி என இருந்துள்ளது. இதையடுத்து பட்டுச்சேலை கடையின் தொலைபேசியை தொடர்பு கொண்டு பெண் குரலில் பேசிய அந்த நபர், மாவட்ட ஆட்சியர் பெயரை பயன்படுத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து சந்தேகமடைந்த கடையின் உரிமையாளர் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல் துறையினர் அந்த நபரை தேடி கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வாணியம்பாடி, திருப்பூர், ஈரோடு, ஊட்டி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்றபோது, அந்த மாவட்ட ஆட்சியர்களை போன்றே பேசி தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பில் இந்நபர் ஈடுபட்டதும் மாவட்ட ஆட்சியர்கள் பெண் என்றால் குரல் மாற்று ஆஃப் மூலம் மாற்றி பேசி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
ஏற்கெனவே நான்கு மாவட்ட ஆட்சியர்களின் பெயர்களை பயன்படுத்தி அங்குள்ள தொழிலதிபர்களிடம் பணம் பெற்று மோசடி செய்த நிலையில், காஞ்சிபுரத்தில் மட்டும் பணமே பெறாமலேயே மோசடி நபர் போலீசிடம் சிக்கியுள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM