2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்தி, `ஏன் அனைத்துத் திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டிருக்கின்றனர்’ என்று பேசியிருந்தார். இது குறிப்பிட்ட சமூகத்தினரைத் தாக்குவதாக குஜராத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர், ராகுல் காந்திக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அது தொடர்பான வழக்கில் சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று உத்தரவிட்டது. அதோடு, மேல்முறையீடு செய்ய 30 நாள்கள் அவகாசம் கொடுத்து, ஜாமீனும் வழங்கியது.
இதற்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் ஒருபக்கம் எதிர்ப்பு தெரிவிக்க, மறுபக்கம் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில், அதிகாரபூர்வமாக எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அறிக்கை வெளியாகியிருக்கிறது.
அந்த அறிக்கையில், “இந்திய அரசியலமைப்பின் 102(1)(e) விதிகளின்படி, வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி ராகுல் காந்தி, தன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளிலிருந்து (மார்ச் 23) பதிவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்” என்று மக்களவைச் செயலாளர் குறிப்பிட்டிருக்கிறார்.