கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய
முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ” மோடி என்ற பெயர் கொண்டவர்கள் எல்லாம் திருடர்களாக ஏன் இருக்கின்றனர்” என்று குறிப்பிட்டார். இது குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவு படுத்தியுள்ளதாக கூறி, ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சூரத் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ராகுல் காந்திக்கு தற்போது 2 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இதனை காரணம் காட்டி ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது. எம்பி பதவி நீக்கப்பட்டுள்ளதால் அடுத்த 8 ஆண்டுகளுக்கு ராகுல் காந்தியால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்புக்கு மத்தியில் கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.
எம்பி ஜோதிமணி
ராகுல் காந்தியின் சிறை தண்டனை மற்றும் எம்பி பதவி நீக்கம் குறித்து பேசிய ஜோதிமணி கூறியது; இது நரேந்திர மோடி அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் மக்கள் விரோத ஊழல் ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைத்து பிரதமராகும் நிலையில் ராகுல் காந்தி இருக்கிறார். அதனால் ராகுல் காந்தியை பார்த்து பாஜக அரசு அஞ்சி நடுங்குகிறது.
மேலும், உலகை உலுக்கிக்கொண்டிருக்கிற அதானி – மோடி ஊழலை பற்றி நாடாளுமன்றத்தில் அச்சமில்லாமல் குரல் எழுப்பியவர் ராகுல் காந்தி. இதனால் அவையில் பேசுவதற்கும் தொடர்ந்து அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. ஒரு பொய்யான ஜோடிக்கப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி இரண்டாண்டுகாலம் தண்டிக்கப்பட்டுள்ளார். இதேபோல பிரிட்டிஷ் ஆட்சியில் பொய் வழக்கு போடப்பட்டு இரண்டு ஆண்டுகாலம் மஹாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், மீண்டும் வந்து அவர் பிரிட்டிஷ் காரர்களை நாட்டைவிட்டு அனுப்பினார்.
அதேபோல, ராகுல் காந்தி மீண்டு வந்து பாஜகவுக்கு எதிராக இரண்டாவது சுதந்திர போராட்டத்தை நடத்துவார். இதெற்கெல்லாம் காங்கிரஸ் கட்சியோ, ராகுல் காந்தியோ அச்சப்பட போவதில்லை.. இதனை நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்பதோடு மோடி அரசின் ஜனநாயகப்படுகொலைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்” என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.