லாக்கரில் இருந்த நகைகள் காணாமல் போன வழக்கில், நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு லாக்கரில் இருந்து நகைகள் திருடிய வழக்கில் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகிய இருவர் தேனாம்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஈஸ்வரிடமிருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டு சொத்து ஆவணங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், ஐஸ்வர்யா வீட்டிலிருந்து திருடிய நகைகளை வைத்து, சோழிங்கநல்லூரில் ஈஸ்வரி 1 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை வாங்கியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் பினாமி தான் என்றும், அதனால் அவர்தான் தனது பெயரை பயன்படுத்தி அந்த வீட்டை வாங்கியிருப்பதாகவும், ஈஸ்வரி தனது குடும்பத்தாரிடம் சொல்லி வைத்ததும் விசாரணையில் அம்பலமானது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளதை விட கூடுதல் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதால், ஐஸ்வர்யாவின் வீட்டுக்குச் சென்றோ, அவரை வரவழைத்தோ விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். வீட்டுக்கு செல்லும்போது லாக்கரில் உள்ள நகைகள் பற்றி கேட்கவும் திட்டமிட்டுள்ளனர். போலீசில் புகார் அளித்தபோது சௌந்தர்யா திருமணத்தின் போது எடுத்த ஆல்பத்தையும் ஐஸ்வர்யா வழங்கியிருந்தார். அந்த ஆதாரத்துடன் ஒப்பிட்டு பார்த்து திருடப்பட்ட நகைகளை போலீசார் சரி பார்த்து வருகிறார்கள். நீதிமன்றத்தில் ஒப்படைக்க திருடப்பட்ட நகைகளின் ஆவணங்கள் குறித்தும் ஐஸ்வர்யாவிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.