டெல்லி: ஜனநாயகத்தின் குரல்வளையை பாஜக நெரிக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார். பிரதமரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டது. மார்ச் 23-ம் தேதி முதல் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலர் உத்பால் குமார் சிங் அறிவித்துள்ளார்.
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; அரசுக்கு எதிராக ராகுல் காந்தி குரல் எழுப்புவதை தடுக்க பாஜக அரசு சதி செய்துள்ளது. நாட்டில் அச்ச உணர்வை உருவாக்க பாஜக அரசு முயற்சி செய்கிறது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் என்பது திட்டமிட்ட நடவடிக்கை. ராகுலுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தில் வெற்றி பெறுவோம். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசுவதை தடுக்கவே, தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அச்சமின்றி ராகுல் பேசி வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். ராகுல் காந்தியின் பேச்சால் அரசு கலக்கம் அடைந்துள்ளது, அச்சமின்றி பேசியதற்கான விலையை அவர் கொடுத்துள்ளார். ராகுல் காந்தியின் பேச்சை முடக்க புதிய வழிமுறைகளை பாஜக அரசு கண்டுபிடித்துள்ளது. உண்மைகளை ராகுல் காந்தி அம்பலப்படுத்தி வருவதால் பாஜக அரசு அரண்டு போயுள்ளது. ராகுல் காந்தி மீதான நடவடிக்கை என்பது சட்டப்படியானது என்று கூறுவதற்கு முன், அது அரசியல் ரீதியானது.
ராகுல் காந்திக்கு மட்டுமல்லாமல், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நாட்டுக்கும் முக்கியமான பிரச்சனை. திட்டமிட்டு, அடுத்தடுத்து ஜனநாயக அமைப்புகளை, ஆளும் பாஜக சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்திருப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதற்கு சமமானது எனவும் கோரினார்.