அயர்லாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அக்சென்சர் (Accenture) நிறுவனம், தனது ஊழியர்களில் 19,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக வியாழன் அன்று அறிவித்துள்ளது. வருடாந்திர வருவாய் மற்றும் லாப கணிப்புகளைக் அடிப்படையாகக் கொண்டு இந்நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
அடுத்த 18 மாதங்களில் இந்த பணிநீக்க நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர் சேவைகளோடு நேரடி தொடர்பில் இல்லாத பாதிக்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து அக்சென்சர் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜூலி ஸ்வீட் கூறுகையில், “2024ம் நிதியாண்டுக்குப் பிறகு எங்களின் செலவுகளைக் குறைக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேநேரத்தில் எங்கள் வணிகத்தில், மக்களிடம் தொடர்ந்து முதலீடு செய்து வரவிருக்கும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி வாய்ப்புகளை அடைய நடவடிக்கை எடுக்கிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இந்நிலையில், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் ஊழியர்கள் 1,400 பேர், பணிநீக்க நடவடிக்கைகளின் போது ஊழியர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று கடிதம் எழுதி சுந்தர் பிச்சைக்கு அனுப்பி உள்ளனர்.
அந்த கடிதத்தில் ஊழியர்கள் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர். புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்துவது, கட்டாய பணிநீக்கத்திற்கு முன்பு தாமாக பணிவிலக முன்வருபவர்களுக்கு முன்னுரிமை தருவது, வேலை வாய்ப்புகளுக்கு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது, போட் டி மற்றும் நெருக்கடி மிகுந்த நாடுகளில் ஊழியர்களைக் குறைக்கும் நடவடிக்கையைத் தவிர்ப்பது, விசாவுடன் தங்குமிடம் இணைக்கப்பட்ட வேலையை இழக்கும் ஆபத்தில் உள்ளவர்களுக்குக் கூடுதல் ஆதரவை வழங்குவது எனப் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
பல நிறுவனங்களும் தொடர்ந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருவது, தொழில்நுட்ப உலகின் மீதான நம்பிக்கையை வெறுமையாக்கி உள்ளது.