காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு, ‘மோடி குடும்பப்பெயர்’ குறித்த கிரிமினல் அவதூறு வழக்கில் இரண்டாண்டு கால தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவரது எம்.பி பதவி பறிபோனது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், தண்டனை காலமான இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிறகு ஆறு ஆண்டுகள் என மொத்தம் எட்டு ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட தண்டனை மற்றும் அதைத் தொடர்ந்து பறிபோன அவரது எம்பி பதவி பற்றி பல அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தூத்துக்குடியில் பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக தலைவர் அண்ணாமலையும் இது குறித்து பேசினார்.
‘சட்டம் அனைவருக்கும் பொருந்தும். சட்டத்தின் அடிப்படையில் தான் சபாநாயகர் அவரை தகுதி நீக்கம் செய்துள்ளார். இதற்கான எதிர் நடவடிக்கையை எடுக்க கூடாது என நீதிமன்றம் ராகுல் காந்தி வழக்கில் சொல்லவில்லை. சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நீதிமன்றம் இதுபோன்று தீர்ப்புகளை வழங்கியுள்ளதில் எம்பிக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல ராகுல் காந்தியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.’ என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மேலும், சாதாரண மனிதனுக்கு ஒரு நீதி அரசு குடும்பத்திற்கு ஒரு நீதி என்று இல்லாமல் அனைவருக்கும் ஒரே நீதி என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடக் கூடாது என இது போன்று நடவடிக்கை எடுக்கவில்லை என கூறிய அண்ணாமலை, ராகுல் காந்தி தான் பாஜகவின் பிராண்ட் அம்பாசிடர் என்றும் ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட்டால் தான் பாஜக வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார். ராகுல் காந்தி போட்டியிடுவதை பாஜக விரும்புகிறது என அவர் மேலும் கூறினார்.