பிரபல கர்நாடக இசைக் கலைஞரும், திரைப் பின்னணி பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக, இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இசைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, லால்குடி ஜெயராமன், டி.ஆர். பாலாமணி ஆகியோரிடம் வாய்ப்பாட்டு கற்றவர். கடந்த 2021-ம் ஆண்டு, மத்திய அரசின் உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ’ விருதையும் பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார். கர்நாடக இசை ரசிகர்களை தனது ‘வசீகர’ குரலால் கவர்ந்த இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்களிலும் பாடியுள்ளார் பாம்பே ஜெயஸ்ரீ. கல்கத்தாவில், தமிழ் குடும்பத்தில் பிறந்த பாம்பே ஜெயஸ்ரீ, ஜி.என். தண்டபாணி ஐயரிடம் வீணையும், பின்னாளில் இந்துஸ்தானி கிளாஸிக்கல் இசையையும் கற்றுள்ளார்.
எம்.எஸ். விஸ்வநாதன் துவங்கி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், எம்.எம்.கீரவாணி, ஹாரிஸ் ஜெயராஜ், ஷங்கர், இமான், யுவன் சங்கர் ராஜா, கோவிந்த் வசந்தா வரை பலரின் இசையில் பாடியுள்ளார். குறிப்பாக, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் – பாடலாசிரியர் தாமரை – இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் – பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோரின் கூட்டணியில் வெளியானப் பாடல்களுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்றே கூறலாம். அதிலும், ‘மின்னலே’ படத்தில் வரும் ‘வசீகரா’ பாடல் காலத்திற்கும் ரசிகர்களின் நினைவில் நிற்பவை.
‘லைஃப் ஆஃப் பை’ படத்தில் இவர் பாடிய தாலாட்டு பாடல், 2012-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு சிறந்த பாடல்கள் பிரிவில் நாமினேட் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இசை நிகழ்ச்சிக்காக, பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்து சென்றுள்ள நிலையில், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, அவர் தங்கியிருந்த ஓட்டலில் சுயநினைவற்ற நிலையில் கீழே விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலை சீரானதும், சென்னை வருவார் என்று சொல்லப்படுகிறது. பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை சீராக, ரசிகர்களும், பிரபலங்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு பாம்பே ஜெயஸ்ரீ தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி கடந்த ஞாயிறன்றுதான் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Having a great time with Bombay Jayashri Akka at Liverpool, United Kingdom.
I’m sooooo happy for her on being conferred with the prestigious title “Sangita Kalanidhi” for the year 2023 by The Madras Music Academy, Chennai.@Bombay_Jayashri #BombayJayashri pic.twitter.com/h5J4b1STkD
— Ghatam GiridharUdupa (@ghatamudupa) March 21, 2023