மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் அதிகம். அதே போல அரசு துறைகளில் அதிகம் மற்றும் நிலையான வருவாயை ஈட்டி கொடுத்து வரும் துறையாக டாஸ்மாக் இருந்து வருகிறது. ஆனால், ஆட்சி மாறினாலும் காட்சி மாறாமல் மது விலை உயர்வு, கூடுதல் விலைக்கு சரக்கு விற்பனை போன்ற குற்றசாட்டுகள் ஒவ்வொரு ஆட்சியிலும் தொடர்கிறது.
விலையை ஏற்றினாலும் மற்ற மாநிலங்களை போல தரமான மது கிடைப்பதில்லை என்றும் சொல்கின்றனர். குறிப்பாக இந்த ஆட்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி கையில் டாஸ்மாக் இருப்பதால் பல்வேறு குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் இருந்து வருகின்றன.
விருதுநகரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மது வாங்க சென்ற ஒருவர் ஏன் மது பாட்டில்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் ஒருவர் ”ஒவ்வொரு மாதமும் கரூர் செந்தில் பாலாஜிக்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளும் மாதம் 50 ஆயிரம் வரை கப்பம் கட்ட வேண்டியுள்ளது… அதனால்தான் ஒவ்வொரு பாட்டில்களுக்கும் பத்து ரூபாய் கூடுதலாக விற்பனை செய்வதாக அவர் கூறுகிறார்..
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்படுவது காலம்காலமாக இருந்து வருகிறது. எந்த ஆட்சியும் அதற்கு விதிவிலக்கல்ல. இருப்பினும், அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து டாஸ்மாக் ஊழியரே குற்றம் சாட்டுவது கவனம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் 2021-22 ஆம் ஆண்டில் மது விற்பனை மூலம் 36,013.14 கோடி வருவாயை அரசு ஈட்டியுள்ளதாக ”த ஹிந்து” பத்திரிகை வெளியிட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 2,201.99 கோடி அதிகமாகும். இந்த உயர்வை குறித்து தமிழகத்தில் டாஸ்மாக் தொழிலைக் கண்காணிக்கும் ஆய்வாளர் ஒருவர் கூறும்போது, வருவாய் அதிகரிப்பு விற்பனையால் அல்ல, விலையேற்றத்தால் ஏற்பட்டதாகக் கூறினார்.
பிடிஆர் அதிருப்தி
டாஸ்மாக் துறையில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனே தெரிவித்துள்ளார். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிக அளவு மது விற்பனை நடந்தாலும் வருமானம் குறைவாக இருப்பதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. வருமானம் குறைவாக இருக்கிறதா அல்லது குறைவாக காட்டப்படுகிறதா என்ற கேள்விகள் எழுந்தன.
அதுகுறித்து பேசிய பிடிஆர், தமிழகத்தில் மது விற்பனையும், வருமானமும் உயர்ந்தாலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. வருமானத்தில் அது வெளிப்படவில்லை. இதனால் விற்பனையும், வருமானமும் டாஸ்மாக் கணக்கில் தான் வருதா என்ற கேள்வி எழுகிறது. டாஸ்மாக் விற்பனையை சிஸ்டத்துக்குள் கொண்டு வருவதுதான் ஒரே வழி. மது ஆலையில் இருந்து ஒவ்வொரு கடை வரைக்கும் கணினி மையமாக்கப்பட வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே தமிழகத்தில் உண்மையான மது விற்பனை என்ன என்பது தெரிய வரும் ஆனால் இது என்னுடைய துறை இல்லாததால் நான் அதிகம் பேச விரும்பவில்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
இதுகுறித்து உங்களது கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள்