நாட்டுக்காக போரடினால் சிறையா? ஏற்கத் தயார்: சூளுரைக்கும் ராகுல் காந்தி

நியூடெல்லி: எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். “இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்; அதற்காக நான் எந்த விலையையும் தர தயாராக உள்ளேன்” எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தனது பதவி தகுதிநீக்கம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; ”நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்; அதற்காக நான் எந்த விலையையும் தர தயாராக உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவர் உங்களுக்காகவும், இந்த நாட்டிற்காகவும் வீதி முதல் பாராளுமன்றம் வரை தொடர்ந்து போராடி வருகிறார். ஜனநாயகத்தைக் காப்பாற்ற, தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்.

கடந்த ஜனதா ஆட்சிக் காலத்தில், திருமதி இந்திரா காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை பழிவாங்கும் நோக்கோடு பறித்தார்கள். சிக்மகளுர் இடைத் தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக தேர்வு பெற்று ஜனதா ஆட்சிக்கு எதிராக மக்களை திரட்டி, 1980 இல் பிரதமராக பொறுப்பேற்று சாதனை படைத்தார், என்று காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடுப் பிரிவு டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, காங்கிரஸ் தலைவர் திரு கார்கே அவர்களின் தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது.

மோடி அரசு, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியைக் கண்டு பயப்படுகிறது. ஜனநாயகத்தை கொன்று, ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்துள்ளனர். உண்மையைப் பேசுபவர்களை வாயடைக்க நினைக்கிறார்கள். இந்த சர்வாதிகாரத்தை நாட்டு மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். ஜனநாயகத்தைப் பாதுகாக்க நாங்கள் சிறை செல்லவும் தயார் என காங்கிரஸ் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை, ராகுல் காந்திக்கு ஆதரவாக ஒன்றுபட்டுள்ளனர்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(4) ஷரத்தின்படி, தகுதிநீக்கம் செய்யப்படும் ஒருவர்,தீர்ப்பு வெளியான நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வரை தகுதிநீக்கம் செய்யக்கூடாது. ஆனால் மேல்முறையீட்டு நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைத்தால், தகுதி நீக்கமும் நிறுத்தப்படும்.

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அவர் எம்.பியாக தொடர்வாரா? ராகுல் காந்தி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுமா என பல்வேறு விவாதங்கள் சர்வதேச அளவில் உச்சகட்டத்தை அடைந்துள்ளன.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.