ராகுல் காந்தி தகுதி நீக்கம்; சர்வாதிகார அடக்குமுறை அறிவிப்பு – பாஜகவுக்கு வலுக்கும் எதிர்ப்பு அலை

முக்கிய தலைவர் ராகுல் காந்தியின் சிறை தண்டனை உத்தரவு மற்றும் பதவி நீக்கத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கடனானம் தெரிவித்துள்ளனர்.

முத்தரசன்

நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக சூரத் நீதிமன்றம் விசாரித்து வந்த அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. மேலும் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசம் வழங்கி, பிணையும் தந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் தண்டனை செயலுக்கு வராது என நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒன்றிய அரசின் செகரட்டரி ஜெனரல், ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி தகுதி இழந்ததாக கூறி, நாடாளுமன்ற உறுப்பினர் உரிமையை பறித்து உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முன்னணி பங்கு வகித்ததும், முதல் மூத்த அரசியல் கட்சியும், நாடாளுமன்றத்தின் முதன்மை எண்ணிக்கை பெற்றுள்ள எதிர்கட்சியுமான காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரை தகுதி நீக்கம் செய்திருப்பது அசாதாரண நடவடிக்கையாகும். பாசிச வகைப்பட்ட தாக்குதலின் தீவிர வடிவமாகும். இனி நாட்டில் எவரும் பிரதமரின் நடவடிக்கையை விமர்சித்து பேச முடியாது என்ற சர்வாதிகார அடக்குமுறையின் அறிவிப்பாகும்.

குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த முஸ்லிம் இன அழிப்பு தாக்குதல் பற்றி பிபிசி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம் கூறும் உண்மைகளையும், நாட்டின் செல்வாதாரங்களை கணக்கியல் மோசடி செய்து கௌதம் அதானியின் சட்டவிரோத கொள்ளை பற்றி ஹிண்டன் பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை வெளிப்படுத்தும் செய்திகளையும் நாட்டு மக்களின் கவனத்தில் இருந்து திசைதிருப்பும் நோக்கம் கொண்ட நடவடிக்கையுமாகும், அரசியல் அமைப்பு சட்டத்தை சிதைக்கும் மரண அடியாகும். நாட்டை அறிவிக்கப்படாத அவசரநிலை நெருக்கடிக்குள் நெட்டித் தள்ளி, ஜனநாயக உரிமைகளை மறுத்து வரும் பாஜக ஒன்றிய அரசின் இரக்கமற்ற ஜனநாயகப் படுகொலையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன் ஜனநாயக சக்திகளும், தேசபக்தர்களும், மதச்சார்பற்ற மாண்பு காக்கும் நல்லெண்ணம் கொண்டோர், பகுத்தறிவாளர்கள், அறிவியல் சிந்தனை கொண்டோர் மனிதாபிமான உணர்வு கொண்டோர் அனைவரும் ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது என அவர் கூறியுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா

பிரதமர் மோடி பெயர் பற்றி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த தண்டனை விதித்த உடனேயை ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவிலிருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்துள்ளது கண்டத்திற்குரிய செயலாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் தண்டனை அளித்தபின் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்து தண்டனையை நிறுத்தி வைத்து அவர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக நீடித்து வருகின்றனர்.

இச்சூழலில் ராகுல் காந்தி விவகாரத்தில் மட்டும் தீர்ப்பு வழங்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் ராகுல் காந்திக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பளிக்காமல் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது சர்வாதிகாரப் போக்கின் வெளிப்பாடாகவும், ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கையாகவும் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக ராகுல் காந்தி நடத்திய தேச ஒற்றுமை நடைப் பயணம் பாஜக அரசிற்கு எதிராக ஏற்படுத்தியுள்ள எழுச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமலும், இனி தேர்தல் அரசியலில் காங்கிரஸ் தலைமை தாங்கும் கூட்டணியை எதிர்கொண்டு வெற்றிப் பெறுவது சாத்தியமற்றது என்பதை உணர்ந்தும் பாஜக இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது” என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.