புதுச்சேரிக்கு சென்று மித மிஞ்சிய மது போதையில் போலீசாரை அடித்து ரகளையில் ஈடுபட்ட தமிழக காவலர் ஒருவரை தண்ணீரால் குளிப்பாட்டி சட்டையை கழற்றி காவல் நிலையத்தில் அமர வைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ஊருவிட்டு, ஊரு சென்று வம்பிழுத்த காவலர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..!
புதுச்சேரி கண்ணியக்கோவில் சந்திப்பில், கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது குடிபோதையில் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரித்த போது தன்னை கடலூர் காவலர் எனக்கூறி ரகளையில் ஈடுபட்டார்.
அவரை சமாதானம் செய்து அனுப்பி வைக்க முயற்சி செய்தனர். ஆனாலும் அந்த நபர் போலீசாரை தாக்கியதால் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் அவரை பிடித்து கிருமாம்பாக்கம் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் அவர் மூக்கு முட்ட குடித்த மது போதை தண்ணீர் தெளித்து போதையை தெளியவைக்க முயற்சி செய்தனர்
நானும் போலீஸ்காரன் தான் என்னை ஒன்னும் செய்ய முடியாது என கூறி போலீசாரை ஆபாசமாக திட்டி மீண்டும் தாக்கி காவல் நிலையத்திற்குள்ளேயே தகராறில் ஈடுபட்டதால சட்டையை கழற்றி தரையில் அமர வைத்தனர்
போதையில் என்ன வேண்டுமானாலும் வழக்கு பதிவு செய்து கொள்ளுங்கள். ஆனால் உங்கள் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவேன் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.
கிருமாம்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில் போதையில் ரகளையில் ஈடுபட்டவர் கடலூர் அடுத்துள்ள கீழ்பூவானிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பதும் இவர் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. தன்னை ஒரு சர்வதேச டான் போல காட்டிக் கொண்ட அந்த குடிகார போலீஸ்காரரை பத்திரிக்கையாளர்களை வரவைத்து வீடியோ எடுத்தனர்
தன்னை படம் பிடித்த செய்தியாளர்களை ஆபாசமாக திட்டி அடிக்க பாய்ந்த குடிகார போலீஸ்காரர், தடுக்க வந்த காவலர்களையும் தாக்கிஅட்டகாசம் செய்தார்
உச்சகட்ட மது போதையில் இருந்த ஜனார்த்தனனின் அடாவடி தாங்க இயலாமல், நொந்து போன போலீசார், அவரது குடும்பத்தினரை வரவழைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது. ஜனார்த்தனன் மீது வழக்கு போட்டால் அவரது பணி பாதிக்கும் என்று உறவினர்கள் கெஞ்சியதால் விரட்டி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே போதை போலீஸ்காரர் ஜனார்த்தனன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்