2023-24 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த திங்களன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில், பள்ளிக்கல்வி உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த முக்கியத் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.
குறிப்பாக, `தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும்’ என அமைச்சர் அறிவித்தார். பட்ஜெட்டுக்கு ஆதரவாக ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கருத்துகள் தெரிவித்துவருகின்றன.
அதேவேளையில், எதிர்க்கட்சியினர் பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்துவருகின்றனர். இப்படியான சூழலில், தமிழ்நாடு பட்ஜெட் குறித்து விகடன் இணையதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அதில், `தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த 2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்து உங்கள் மதிப்பீடு என்ன?’ என்று கேள்வி கொடுக்கப்பட்டு, `சிறப்பு, ஓரளவுக்கு பரவாயில்லை, மோசம்’ என மூன்று விருப்பங்கள் தரப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, அதிகபட்சமாக 45 சதவிகிதம் பேர், தமிழ்நாடு அரசின் பட்ஜெட் `சிறப்பு’ என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, 29 சதவிகிதம் பேர் `ஓரளவுக்குப் பரவாயில்லை’ என்றும், 26 சதவிகிதம் பேர் `மோசம்’ என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, எம்.பி பதவியிலிருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் தரப்பிலிருந்து வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறப்பட்டுவருகிறது.
இந்த நிலையில் ராகுல் காந்திமீதான இத்தகைய நடவடிக்கை குறித்து விகடன் இணையதளப் பக்கத்தில், கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுவருகிறது. இதில் கலந்துகொள்ள பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்… https://www.vikatan.com/