பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மஜத ஆகிய முக்கிய கட்சிகள் பிற கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாஜக முன்னாள் எம்எல்சி புட்டண்ணா அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.
இதைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் 14 தலித் அமைப்புகளின் தலைவர்கள் முன்னாள் அமைச்சர் ஆஞ்சநேயா வழிகாட்டுதலின்பேரில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் முன்னிலையில் காங்கிரஸில் சேர்ந்தனர். இதே போல பிற அமைப்பினரையும் காங்கிரஸில் இணைக்கும் முயற்சியில் டி.கே.சிவகுமார் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாஜக முன்னாள் எம்எல்சி பாபுராவ் சிஞ்சன்சூர் அக்கட்சியில் இருந்து விலகி டி.கே.சிவகுமார் முன்னிலையில் காங்கிஸில் இணைந்தார். இவர் கடந்த 2013–2018 வரையிலான சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். 2019 தேர்தலில் குல்பர்கா தொகுதியில் தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை தோற்கடிப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
கோலி வகுப்பை சேர்ந்த பாபுராவ் சிஞ்சன்சூர் பாஜகவில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததால், அக்கட்சியில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.