தர்மபுரி அருகே ஆபாசமாக பேசிய இளைஞர்களை தட்டிக் கேட்ட ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது கல்லால் தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. இது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் காட்டம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், இளைஞர்கள் சிலர் கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை கேட்டு ஊராட்சி மன்ற தலைவி இடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
அப்போது சில இளைஞர்கள் ஆபாசமாக பேசி, ஊராட்சி மன்ற தலைவியை அவமரியாதை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் சத்திய பிரபு சம்பந்தப்பட்ட அந்த இளைஞர்களை தட்டிக் கேட்டுள்ளார்.
இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், கைகலப்பு ஏற்பட்டபோது, சில இளைஞர்கள் சத்ய பிரபுவை கல்லால் தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இதனால் படுகாயம் அடைந்த சத்திய பிரபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்/
இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.