திருவள்ளூர்: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், ஈக்காடு துணை சுகாதார நிலையத்தில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் தேசிய காச நோய் ஒழிப்பு திட்டம் சார்பாக சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இணை இயக்குநர் அ.லட்சுமி முரளி (காசநோய்), துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) கே.ஆர்.ஜவஹர்லால், (தொழுநோய் பிரிவு) வசந்தி, ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜி.சிவகுமார், இரா.வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் எத்திராஜ், சரத்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி பேசியதாவது, ஒரு காலத்தில் நமக்கு காச நோய் வந்தால் வாழ்க்கையே இல்லை என்ற சூழ்நிலையை மாற்றி, காசநோய்க்கு எங்களால் முடிவு கட்ட முடியும் என்று உறுதியாக சொல்லக்கூடிய அளவில் நாம் இருக்கிறோம். இதற்கு தமிழகத்தில் மருத்துவ அறிவியல் வளர்ச்சி, பொது சுகாதார வளர்ச்சி, மருத்துவர்களின் சிகிச்சை முறை தான் காரணம். இன்றைக்கு நிறைய செவிலியர் மாணவர்கள் வந்துள்ளீர்கள். சுகாதார பணியாளர்கள் அனைவரையும் இந்த காசநோய் தினத்தில் அனைவரையும் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
அதே நேரத்தில், காசநோய் வந்தால் நான்கு மாதத்திலிருந்து முழுமையாக குணமடைய கூடிய ஒரு சூழ்நிலை உள்ளது. அதுமட்டுமின்றி, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில் யாரேனும் காசநோய் இருந்தால் ஐஜிஆர்ஏ இரத்தப் பரிசோதனை மூலம் தொற்று உள்ளவர்களுக்கு வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் காசநோய் தடுப்பு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற அளவிற்கு முன்னேற்றம் அடைந்து இருக்கிறோம். இருமல் இருந்தாலும், மாலை நேரத்தில் காய்ச்சல் இருந்தாலும், அதிகப்படியாக சோர்வு இருந்தாலும் உடனடியாக நாம் அருகில் உள்ள சுகாதார மையத்தை அணுகி காசநோய்க்கு பரிசோதனை செய்ய வேண்டும். களப்பணிகள் மூலம் பரிசோதனை செய்து, டெஸ்ட் எடுக்கிறோம்.
முழுமையாக சிகிச்சை பெறக்கூடிய ஒரு நோய். இதற்காக சமூகத்தில் இனியும் மக்களிடம் விழிப்புணர்வு சென்றைடைய வேண்டியுள்ளது. இதற்காக நாம் அனைவரும் சேர்ந்து உழைத்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் தேசிய காச நோய் ஒழிப்பு திட்டம் சார்பாக அமைக்கப்பட்ட மனித சங்கிலி தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சியையும், காசநோய் விழிப்புணர்வு கண்காட்சி அரங்கையும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டார்.
பிறகு காச நோயால் பாதிக்கப்பட்ட 50 நபர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பாக தலா ரூ.3 ஆயிரம் வீதம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலான ஊட்டச்சத்து உணவு பொருட்களையும் இலவசமாக வழங்கினார்.