வார்த்தைகளில் கண்ணியம் இருக்க வேண்டும் – பாஜக தலைவர்கள் கருத்து

புதுடெல்லி: வார்த்தைகளில் கண்ணியம் அவசியம். சூரத் நீதிமன்ற தீர்ப்பு ராகுல் காந்திக்கு படிப்பினையாக அமையும் என்று பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்த குஜராத் எம்எல்ஏ புர்னேஷ் மோடி கூறும்போது, “சிலரது தவறுக்காக ஒட்டு மொத்த சமுதாயத்தின் மீதும் பழி சுமத்துவது சட்டவிரோதம். ராகுல் ஒட்டுமொத்த மோடி சமுதாயத்தை இழிவுபடுத்தினார். அரசியலுக்காக அல்லாமல் சமூகப் பிரச்சினைக்காகவே ராகுல் காந்தி மீது வழக்குத் தொடர்ந்தேன். ராகுல் எத்தனை முறை மேல்முறையீடு செய்தாலும் எனது உயிருள்ளவரை வழக்கை நடத்துவேன்” என்றார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, “வாளால் ஏற்படும் காயங்களின் வலியைவிட வார்த்தைகளால் ஏற்படும் காயங்களின் வலி அதிகமாகும். எனவே வார்த்தைகளில் கண்ணியம் அவசியம். சூரத் நீதிமன்றத் தீர்ப்பு, ராகுல் காந்திக்கு படிப்பினையாக அமையும்” என்றார்.

மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜுஜு கூறும்போது, “ராகுல் காந்தியின் நடவடிக்கைகளால் காங்கிரஸ் அதிகமாகப் பாதிக்கிறது. அவரது பேச்சுகளால், அந்தக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது” என்றார்.

பாஜக எம்.பி. சுஷில் குமார் மோடி கூறும்போது, “எனது பெயரிலும் மோடி உள்ளது. ராகுல் காந்தியின் கருத்தால் நானும் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளானேன். எனவே, நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன். ராகுல் காந்திக்கு எதிராக பாட்னா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கிலும் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

இதற்கிடையில், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “எதிர்க்கட்சிகளின் தலைவர்களை அழிக்க பாஜக சதி செய்கிறது. காங்கிரஸோடு எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், இதுபோன்ற வழக்கில் ராகுல் காந்தியை அவமதிப்பது சரியான நடவடிக்கை கிடையாது. நாங்கள் நீதிமன்றத்தை மதிக்கிறோம். ஆனால் ராகுல் காந்தி மீதான தீர்ப்பை ஏற்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெகதாத் பொன்னவாலா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “ஆம் ஆத்மியின் நாடகம் அம்பலமாகிவிட்டது. அந்தக் கட்சி காங்கிரஸை முழு மனதுடன் வரவேற்கிறது.

ஊழல் விவகாரத்தில் காங்கிரஸோடு இணைந்து நிற்கிறோம். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் மீதான ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று கேஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, “வழக்கின் ஆரம்பம் முதல் சூரத் நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட் அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டார். நாங்கள் நீதியின் மீது நம்பிக்கைகொண்டிருக்கிறோம். சட்டரீதியாகப் போராடுவோம்” என்றார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “ராகுல் காந்தியின் குரலை ஒடுக்க மத்திய அரசு அமைப்புகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. ஆனால் எனது அண்ணன் எதற்கும் அஞ்ச மாட்டார். அவர் உண்மைக்காக வாழ்கிறார். உண்மையை மட்டுமே பேசுவார். மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பார். உண்மையின் பலம், கோடிக்கணக்கான மக்களின் அன்பு அவரோடு இருக்கிறது” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.