சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதங்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, ஏற்கெனவே இபிஎஸ் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில், ஓபிஎஸ் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.
அதன்படி நேற்று ஓபிஎஸ் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டன. அதில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் குறித்து நிலுவையில் உள்ள பிரதான வழக்கில்தான் முடிவு செய்ய முடியும் என சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வும், உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது.
இந்நிலையில் அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தலை அவசர கதியில் நடத்தி முடிவை அறிவிப்பது என்பது அந்த உத்தரவுகளுக்கு முரணானது. இந்த இரு பதவிகளும் கட்சிவிதிகளின்படி வரும் 2026 வரை சட்ட ரீதியாக நீடிக்கும். இந்தபதவிகளையே தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது.
ஏற்கெனவே கடந்த ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது. இந்தவழக்கில் தனி நீதிபதி கே.குமரேஷ்பாபு வரும் திங்கள்கிழமை தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தனி நீதிபதி திங்கள்கிழமை தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.