ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை அவர் மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்று தான் வணிக நோக்கில் ப்ளூ டிக் பெற்ற பயனர் கணக்குகளிடம் இருந்து சந்தா வசூலிப்பது. அதன்படி ட்விட்டர் தளத்தில் யார் வேண்டுமானாலும் சந்தா செலுத்தி அங்கீகரிக்கப்பட்ட கணக்கு என்ற அடையாளத்திற்கான ப்ளூ டிக்கை பெறலாம் என அறிவிக்கப்பட்டது.
அதற்கு முன்னர், ஊடக நிறுவனங்கள், சமூக வலைதள இன்ப்ளுயன்ஸர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் போன்ற பயனர் கணக்குகளுக்கு மட்டுமே ப்ளூ டிக் வழங்கி வந்தது ட்விட்டர். இவர்கள் அனைவரும் சந்தா கட்டணம் செலுத்தாமல் இந்த அம்சத்தை பெற்று வந்தனர். இந்த சூழலில் ப்ளூ டிக் சந்தாவை மேற்கூறிய இந்த அங்கீகரிக்கப்பட்ட பிரபலங்களும் செலுத்த வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இந்த கணக்குகளை பயன்படுத்தி வருபவர்கள் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் சந்தா செலுத்தவில்லை என்றால் ‘ப்ளூ டிக்’ அங்கீகாரத்தை இழக்க வேண்டி இருக்கும் என தெரிகிறது.
ட்விட்டரில் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள், அரசு மற்றும் தனிநபர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் பல்வேறு வண்ணங்களில் இந்த டிக் மார்க் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் மெட்டாவின் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளுக்கு ‘ப்ளூ டிக்’ சந்தா அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.