அப்பா பாரதிராஜாவை இயக்கும் மகன் மனோஜ்
இயக்குனர் மற்றும் நடிகர் பாரதிராஜா இப்போது நடிகராக பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரின் மகன் நடிகர் மனோஜ், தாஜ்மஹால் படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். அதன்பின் பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் எந்த படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் மனோஜ். இந்த படத்தை இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்கிறார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இயக்குநராக தனது முதல் படத்தை தயாரிப்பதற்காக சுசீந்திரனுக்கு நன்றி தெரிவித்துள்ள மனோஜ் பாரதிராஜா, இயக்குனர் மணிரத்னத்திடம் பம்பாய் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அதனையொட்டி அவரை சந்தித்து ஆசி பெற்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. முதல் பார்வையை மார்ச் 31 அன்று 10 முன்னணி இயக்குநர்கள் வெளியிட உள்ளார்கள்.