ஜனவரி மாதம் முதல் அடிக்கடி கர்நாடகாவுக்கு செல்லும் பிரதமர் மோடி கடந்த மூன்று மாதங்களில் ஏழாவது முறையாக இன்று மீண்டும் கர்நாடகா செல்கிறார். அவரது வருகையை முன்னிட்டு பெங்களூரு, சிக்பள்ளாப்பூர், தாவணகெரே ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு!
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது பாஜக. காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) ஆகிய கட்சிகளும் தீவிர களப்பணியாற்றி வருகின்றன.
ஏழாவது முறை!
தென் மாநிலங்களில் பாஜக ஓரளவு செல்வாக்கு செலுத்தும் மாநிலமாக கர்நாடகா உள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை பிரதமர் மோடி வாடிக்கையாக வைத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதல் ஆறு முறை கர்நாடகா வந்த அவர், இன்று ஏழாவது முறையாக வருகை தருகிறார்.
தனி விமான் மூலம் வருகை!
இன்று காலை தனி விமானம் மூலம் பெங்களூரு வரும் பிரதமர் மோடி, எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிக்பள்ளாப்பூருக்கு செல்லும் அவர், அங்கு மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை திறந்து வைக்கிறார்.
மெட்ரோ சேவை தொடக்கம்
பிறகு அவர் பெங்களூரு சென்று, அங்கு கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
பாஜக யாத்திரை
அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தாவணகெரேவுக்கு சென்று பா.ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
சிவமொக்கா டூ டெல்லி
அந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு அவர், சிவமொக்காவுக்கு சென்று பிறகு அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.