புதுடெல்லி: சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக 14 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளன. இது தொடர்பான வழக்கு ஏப்ரல் 5-ம்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
14 எதிர்கட்சிகள் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பாஜகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகளை ஒடுக்குவதையும், அவர்களை செயல்படவிடாமல் தடுப்பதையும் இலக்காக வைத்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை போன்ற மத்திய முகமை அமைப்புகளை மத்திய அரசு ஏவி வருகிறது.
எதிர்கட்சி தலைவர்களை பல்வேறு வழக்குகளில் சிக்க வைக்க இந்த அமைப்பை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்கிறது. வழக்குப் போடப்பட்ட தலைவர்கள் பாஜகவுடன் சமரசம் ஆகிவிட்டால் அந்த வழக்குகள் அப்படியே கைவிடப்பட்டு விடுகின்றன. 95 சதவீத வழக்குகள் எதிர்கட்சி தலைவர்களை குறிவைத்தே போடப்படுகின்றன.
விதிகள் மீறல்: கைது நடவடிக்கைகளின் போது அதற்கான முந்தைய, பிந்தைய விதிமுறைகள் சரியான முறையில் கடைபிடிப்பதில்லை. அதனை முறையாக பின்பற்ற வேண்டும் என்பதே எதிர்கட்சிகளின் நிலைப்பாடு. விசாரணை அமைப்புகளை அரசியல் ஆதாயத்துக்காக தவறாக பயன்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், பிஆர்எஸ், ஆர்ஜேடி, சமாஜ்வாதி, சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி), திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திசூட் தலைமையிலான அமர்வு முன்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தாக்கல் செய்தார். அப்போது, இதுதொடர்பான வழக்கை இரண்டு வாரங்களில் பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதி வரும் ஏப்ரல் 5-ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தார்.
ஆனால், 14 எதிர்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் மத்திய முகமை அமைப்புகள் முழு சுதந்திரத்துடனும், தன்னிச்சையாகவும் செயல்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.