புதுடெல்லி: புதிய வருமான வரி விதிப்பு முறையில் வழங்கப்பட்டுள்ள சிறிய நிவாரணத்தின்படி, ஆண்டு வருமானமாக ரூ.7 லட்சத்து 27 ஆயிரத்து 700 வரை சம்பாதிப்போர் வரி செலுத்த தேவையில்லை என வரி நிபுணர்கள் கூறி உள்ளனர். கடந்த 1ம் தேதி அறிவிக்கப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில், புதிய வருமான வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி, ரூ.7 லட்சம் வரை ஆண்டு சம்பளம் பெறுவோர் வரி செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டது.
வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த புதிய வரி விதிப்பு முறை அமலுக்கு வருகிறது. ஆனால் ஒருவரின் சம்பளம் 7 லட்சத்து 100 ஆக இருக்கும் பட்சத்தில் அவர் ரூ.25,010 வரி செலுத்த வேண்டும். அதாவது ரூ.100 கூடுதல் வருமானத்திற்கான வரி ரூ.25,010 ஆக உள்ளது. இதை நிவர்த்தி செய்யும் வகையில், மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நிதி மசோதாவில் புதிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. நிவாரணத்திற்கு தகுதியான உச்ச வரம்பு வருமானத்தை அரசு குறிப்பிடவில்லை என்றாலும், ரூ.7 லட்சத்து 27 ஆயிரத்து 700 வரை ஆண்டு சம்பளம் பெறுவோர் புதிய வரி முறையின் கீழ் வரி செலுத்த தேவையில்லை என வரி வல்லுநர்கள் கணக்கிட்டு தெரிவித்துள்ளனர்.