“ராகுல்காந்தி, நடை பயணத்தின் (இந்திய ஒற்றுமை யாத்திரை) மூலம் பெரிய இடத்திற்கு சென்றுவிட்டார் என்ற எண்ணத்தில், அவருக்கு இந்த தண்டனையை பெற்று தந்துள்ளது பாஜக” என திமுக எம்பி திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பில் ‘திராவிட மாடல் 63’ ‘அலைபோல் உழைப்பு மலைபோல் உயர்வு’ என்ற தலைப்பின்கீழ் புகழ் அரங்கம் நடைபெற்றது. அம்பத்தூர் கிழக்கு பகுதி கழக செயலாளர் எம்டிஆர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும் இந்து சமய அறநிலைத் துறை அமைச்சருமான சேகர் பாபு முன்னிலை வகித்தார்.
இதில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திராவிட மாடல் ஆட்சி மற்றும் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் நிகழ்த்திய சாதனைகள் குறித்து மக்களிடையே பேசினர்.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் திருச்சி சிவா பேசுகையில், “லலித் மோடி, நீரவ் மோடி என்பவர்களை பற்றி ராகுல்காந்தி பேசியது தன்னை பாதிக்கிறது என்பதால் அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி இரண்டாண்டு சிறை தண்டனை அளித்துள்ளது பாஜக அரசு. இந்த ஜனநாயக நாட்டில் ஒருவரை விமர்சித்து பேசினால் வழக்கு தொடர்வதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இரண்டாண்டு தண்டனை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் ராகுல் காந்திக்கு உள்ளது. ஆனால், அது சரியானதா தவறானதா என்பது தான் முக்கியம். கடந்த ஆட்சிகாலங்களில் உணர்ச்சிபூர்வமான எத்தனையோ பிரச்னைகளுக்கு, எத்தனையோ முறை நாடாளுமன்றத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது. ஆனால், தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் அது நடக்கிறதா என்பது கேள்விக்குறி தான். இன்றைய பிரதமர் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் அவைக்கே வருவதில்லை. அவர் முதலமைச்சராக இருந்தபோதே முக்கியமான நாட்களை தவிர அவைக்கு சென்றதில்லை.
ராகுல் காந்தி, தனது நடை பயணத்தின் மூலம் பெரிய இடத்திற்கு சென்றுவிட்டார் என்ற எண்ணத்தில் அவருக்கு இந்த தண்டனையை பெற்று தந்துள்ளது பாஜக. ஆனால் இது அவருக்கு பாதகம் அல்ல சாதகம் என்பதை அவர்கள் அறிய வேண்டும். இதுவரை அவரை பற்றி பேசாதவர்கள் கூட இன்று அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, “ராகுல் காந்தியின் மீது தொடுக்கப்பட்டுள்ள அவதூறு வழக்கு இது. பொதுநல வழக்கு அல்ல. குறிப்பிட்ட ஒரு சிலர் தொடுக்ககூடியது தான் அவதூறு வழக்கு. சட்ட நுணுக்கங்கள் இருக்கக்கூடிய இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், வழக்கை தொடுத்தவர் ஒராண்டு தடை ஆணை கேட்டிருந்தார். ஆனால், அதை ரத்து செய்து இப்போது வழக்கை விரைவுபடுத்துகிறார்.
மார்ச் 1 – மக்கள் முதல்வரின் மனிதநேய திருநாள்
திராவிட மாடல் 63: அலைபோல் உழைப்பு! மலைபோல் உயர்வு!
சென்னை கிழக்கு மாவட்டம், அம்பத்தூர் கிழக்கு பகுதி – கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற மாபெரும் புகழரங்கத்தில் கழக கொள்கை பரப்புச் செயலாளர் திரு.திருச்சி சிவா எம்.பி, (1/2) pic.twitter.com/8OOTmw4dm7
— P.K. Sekar Babu (@PKSekarbabu) March 24, 2023
குறிப்பிட்ட இந்த வழக்கில் அரசியல் சட்டத்திற்கேற்பதான் ராகுலுக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதே அரசியல் சட்டத்தில் ‘இரண்டு ஆண்டு தண்டனை விதித்தால் தகுதி இழப்பு வரும்’ என்று இருந்தாலும், கீழமை நீதிமன்றம் தண்டனை விதித்திப்பதால் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் உள்ளது. ஆனால், அதற்குள்ளாக நாடாளுமன்ற செயலாளர் அவரை தகுதி நீக்கம் செய்திருக்கிறார். இன்னும் நிறைய படிகள் கடந்து உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என பல வாய்ப்புகள் ராகுலுக்கு காத்திருக்கிறது.
அப்படியிருக்க அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள பெரிய சவால். சாதாரணமான ஒரு பிரச்னையை பெரிதாக்கி, ஒரு பெரிய கட்சியின் தலைவரை ‘தண்டிப்போம், பதவி நீக்கம் செய்வோம், தேர்தலில் போட்டியிடாமல் செய்வோம்’ என்பதெல்லாம் அவரை அச்சுறுத்துகின்ற ஒரு முயற்சி. உண்மையில் ‘ராகுல் காந்தியை பார்த்து ஒன்றிய பாஜக அஞ்சுகிறது’ என தலைவர் தளபதி கூறியுள்ளார்.
ராகுல் விஷயத்தில் அரசின் இதுபோன்ற அணுகுமுறைகள் ஏற்புடையதல்ல. நாம் இன்னும் பொறுத்திருந்தால் நல்லது நடக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது” என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM